2012-11-09 15:48:44

திருத்தந்தையின் சார்பில் கர்தினால் Robert Sarah லெபனான் நாட்டில் மேற்கொண்டுள்ள பயணம்


நவ.09,2012. கர்தினால் Robert Sarah லெபனான் நாட்டில் மேற்கொண்டுள்ள பயணம் திருப்தி தரும் வகையில் அமைந்துள்ளது என்று அந்நாட்டில் உள்ள காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் பேரருள்தந்தை Simon Faddoul கூறினார்.
சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகள், கலவரங்கள் ஆகியவை குறித்து, திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த, திருத்தந்தையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கர்தினால் சாரா, அங்குள்ள அரசியல் தலைவர்களையும், பல்வேறு மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
நவம்பர் 7 இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில், சிரியாவில் அமைதியைக் கொணரும் ஒரு முயற்சியாக, தன் சார்பில் Cor Unum என்ற திருப்பீட பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் சாராவை அனுப்புவதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லெபனான் நாட்டுக்கு இப்புதனன்று சென்று சேர்ந்த கர்தினால் சாராவை, அந்நாட்டு அரசுத் தலைவர் Michel Suleiman வரவேற்றார்.
இப்பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சந்திப்புக்களின் உச்சகட்டமாக, 91 வயது நிரம்பிய அந்தியோக்கு ஆர்த்தடாக்ஸ் தலைவர் நான்காம் Ignatius Hazim அவர்களை, தமாஸ்கு நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இவ்வியாழனன்று கர்தினால் சாரா சந்தித்தார் என Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.