2012-11-08 15:58:53

திருப்பீடத்தின் தீபாவளி வாழ்த்து


நவ.08,2012. சமய, அறநெறிகளில் உறுதியாக நிலைத்து, அமைதியை உருவாக்குபவர்களாக மாற முயற்சிக்கின்ற இளையோருக்கு உற்சாகமூட்டுபவர்களாக இந்துக்களும், கிறிஸ்தவரும், ஏனைய அனைவரும் செயல்படுமாறு அழைப்பு விடுத்து தன் தீபாவளி பெருவிழா வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளது பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவை.
இம்மாதம் 13ம் தேதி, வரும் செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் ஜீன் லூயி தௌரான், செயலர் அருட்திரு. மிகுயில் ஏஞ்சல் ஆயுசோ குல்சாட் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இளையோரை அமைதி ஏற்படுத்துபவர்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என ஆராய அழைப்புவிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள், துறவறத்தார், சமூகத் தொடர்புத் துறையில் உள்ளோர், மற்றும் அமைதியை உருவாக்கும் உள்ளம் படைத்தோர் அனைவரும் இளைய சமுதாயத்திற்கு அமைதி குறித்துக் கற்பிக்கவும், அன்பின் கனியாம் அமைதியை உருவாக்கவும் தீபாவளி வாழ்த்துச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட அவை.
அமைதி என்பது நம்பகத்தன்மையானதும் நீடித்து நிற்பதுமாக இருக்க, அது உண்மை, நீதி, அன்பு மற்றும் சுகந்திரத்தின் மேல் கட்டப்பட வேண்டும் எனக்கூறும் இச்செய்தி, குடும்பம்தான் அமைதியின் முக்கிய கல்விக்கூடம். அதில் பெற்றோர்கள்தான் அமைதியின் முக்கிய கல்வியாளர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.