2012-11-08 15:57:55

திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


நவ.08,2012. அறிவியலில் நாம் கண்டுள்ள முன்னேற்றமும், இயற்பியலில் நாம் கண்டுபிடித்துள்ள துல்லியமான கருவிகளும் நம்மை உண்மையின் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரில் இத்திங்கள் முதல் புதன் முடிய நடைபெற்ற திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களை, இவ்வியாழன் நண்பகல் சந்தித்தத் திருத்தந்தை, அறிவியலையும், விசுவாசக் கோட்பாடுகளையும் இணைக்க அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
ஒரே உண்மையைப் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவும், இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவும் கருத்தரங்குகள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த ஆய்வுகள் நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவை நம்பிக்கை ஆண்டாகக் கொண்டாடி வருகிறோம் என்பதைக் கூடியிருந்த உறுப்பினர்களுக்கு நினைவுருத்தியத் திருத்தந்தை, அறிவியலையும், விசுவாசத்தையும் உறுதியாக இணைக்கும் திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் தன் சிறப்பு ஆசீரை வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.