2012-11-07 15:34:18

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ. 07, 2012. இத்தாலியில் குளிர்காலம் துவங்கிவிட்டாலும் இப்புதன் காலை இதமான வெப்பத்தை உரோம் நகரம் தாங்கி நின்றதால், திருத்தந்தையின் பொதுமறைபோதகம் தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைபோதகத்தில் , மனித இதயத்தில் ஆழமாக காணக்கிடக்கும் இறைவனுக்கான மறைபொருள் நிறைந்த ஆவல் குறித்து நோக்குவோம் என தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
இறைவன் தனக்காகவே நம்மை படைத்தார். புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், இறைவனில் ஓய்வடையும் வரை நம் இதயங்கள் அமைதியடைவதில்லை. மதச்சார்பின்றி வாழும் இன்றைய நவீன உலகிலும் இறைவன் மீது நாம் கொள்ளும் பேராவல், அனைத்திற்கும் மேலாக அன்பெனும் அனுபவத்தில் தொடர்ந்து உணரப்படுகிறது. பிறர்நலன் விரும்பும் அன்பில் நம்மையே நாம் வழங்குபவர்களாக உள்ளோம். இது நம் இதயங்கள் குணப்படுவதையும் தூய்மைப்படுவதையும் உள்ளடக்கியது. அதுபோல் நட்பிலும், நன்மைத்தனம் மற்றும் உண்மை மீதான தாகத்திலும், அழகின் அனுபவத்திலும் நம்மையும் தாண்டிய மறையுண்மையில் முழுமையான நிறைவேற்றலுக்கான ஒரு வாக்குறுதியை மங்கலாக நாம் உணர்கிறோம். நம் உள்ளிருக்கும் மத உணர்வின் வழியாகவே நம் இதயங்களை விசுவாசம் எனும் கொடைக்கு நம்மால் திறக்க இயல்கிறது. நம் ஆழமான ஆவலின் நிறைவாகவும், அனைத்து நன்மைத்தனங்களின் ஆதாரமாகவும் கடவுளுக்கு மிக அருகில் நம்மை அழைத்துச் செல்வது இந்த விசுவாசமே. நம்பிக்கை ஆண்டு என நாம் சிறப்பிக்கும் இவ்வாண்டில், நேர்மையான இதயத்துடன் உண்மையை நாடி வரும் நம் உடன்வாழ் மக்கள், விசுவாசத்திலிருந்து பிறக்கும் விடுதலையையும் மகிழ்வையும் கண்டுகொள்ளுமாறு அவர்களுக்காக செபிப்போம்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை பல்வேறு மொழிகளில் வழங்கிய திருத்தந்தை, சிரியா நாட்டிற்கான விண்ணப்பம் ஒன்றையும் முன் வைத்தார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை மோதல்களின் விளைவுகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறேன். அங்கு ஒவ்வொரு நாளும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், அப்பாவி மக்களின் துன்பங்கள் பெருகுவதும், குறிப்பாக எண்ணற்றோர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதும் பெரும் வேதனை தருவதாக உள்ளன. என்னுடையதும், சிரிய மக்களின் முழு திருஅவையினுடையதும் அடையாளமாகவும், அந்நாட்டின் கிறிஸ்தவ சமூகங்களுடன் ஆன ஆன்மீக அருகாமையினை வெளிப்படுத்தும் விதமாகவும் தமாஸ்கஸ் நகருக்கு ஆயர்கள் சிறப்பு மாமன்றத் தந்தையர்கள் கொண்ட பிரதிநிதிகள் குழுவை அனுப்ப ஆவல் கொண்டேன்.
எதிர்பாராதவிதமாக, பல்வேறு சூழல்களாலும், அண்மை நடவடிக்கைகளாலும் இது திட்டமிட்டபடி செயல்படுத்தப்படமுடியவில்லை. ஆகவே தற்போது ‘கோர் ஊனும்’ எனும் திரு அவையின் பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாராவிடம் ஒரு சிறப்புப் பணியை ஒப்படைக்க ஆவல் கொண்டுள்ளேன். இன்று முதல் இம்மாதம் 10ம் தேதி வரை லெபனனில் இருக்கும் கர்தினால் சாரா, சிரிய திருஅவை விசுவாசிகளையும் மேய்ப்பர்களையும் சந்தித்து உரையாடுவார். அங்குள்ள அகதிகளைச் சந்திப்பதோடு, சிரிய நாட்டிற்குள் துன்புறும் மக்களுக்கும் நாட்டிற்கு வெளியே குடிபெயர்ந்துள்ள மக்களுக்கும் உதவிகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
இறைவனை நோக்கி இம்மக்களுக்காகச் செபிக்கும் அதேவேளை, இம்மோதல்களுக்கு நீதியான அரசியல் தீர்வு காணும் நோக்கில், நீதியாக இணைந்து வாழ்வதற்கான பேச்சுவார்த்தையின் பாதையையும் அமைதி வழிகளையும் தேடுவதில் எல்லாவித முயற்சிகளையும், நல்மனம் கொண்டோரும் சிரியாவில் போரிடும் துருப்புகளும் கைக்கொள்ளவேண்டும் என்ற அழைப்பை புதுப்பிக்கிறேன் என்ற திருத்தந்தை, இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.