2012-11-07 16:15:45

அரேபிய நாடுகளின் இரண்டாவது இளையோர் மாநாடு அபு தாபியில் நவம்பர் மாதம் 15-17


நவ.07,2012. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இளையோரைச் சார்ந்தது என்பதால், அவர்களை நம்பிக்கையில் வளர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது நல்லது என்று தென் அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Hinder கூறினார்.
அரேபிய நாடுகளின் இரண்டாவது இளையோர் மாநாடு நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி முடிய அபு தாபியில் உள்ள புனித யோசேப்பு பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு குறித்த விவரங்களை வெளியிட்ட ஆயர் Paul Hinder, இம்மாநாட்டில் 1500க்கும் அதிகமான கத்தோலிக்க இளையோர் கலந்துகொள்வர் என்று கூறினார்.
அரேபிய நாடுகளில் வாழும் கத்தோலிக்க இளையோர் அகில உலக இளையோர் மாநாடுகளில் கலந்துகொள்ள பணவசதி இன்றி இருப்பதால், இத்தகைய மாநாடு அரேபியப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஆயர் Hinder மேலும் கூறினார்.
2009ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு, இவ்வாண்டு அபு தாபியில் நடைபெறும் இந்த மாநாட்டில், "நம்பிக்கைக் கொள்வோருக்கு அனைத்தும் சாத்தியமே" என்ற விவிலிய வார்த்தைகள் மையக் கருத்தாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.