2012-11-06 16:16:28

விவிலியத் தேடல் - திருப்பாடல் 142


RealAudioMP3 வலுவான காற்றடித்து, வீட்டுக் கூரையிலோ, சன்னல்களிலோ சப்தங்கள் எழும்போது, திருடர்கள் நுழைந்துவிட்டார்களோ, என்னை எதுவும் செய்து விடுவார்களோ என்று பயம். வீட்டில் தனியாகத் தூங்குவதற்குப் பயம். வீட்டில் இருந்தால்தானே இந்தத் தொல்லை, வெளியில் எங்காவது செல்லலாமென கார் எடுத்தால், ஏதாவது விபத்து நடந்துவிடுமோ என்ற பயம். அன்புப்பணிகள் செய்தால் மனதுக்கு இதமாக இருக்கும் என்று நினைத்தாலும், அவற்றைச் செய்யும்போது ஏதாவது நடந்துவிடுமோ என்று பயம். புதிதாக முடிவுகள் எடுக்கப் பயம். பிறரை நம்புவதற்குப் பயம். இப்படி வாழ்க்கையே பயம் நிறைந்ததாகிவிட்டது. எனவே தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இப்போது நாம் கேட்டது மிகைப்படுத்தி சொல்லப்பட்டது போலத் தோன்றுகிறதா? இல்லை. இது முற்றிலும் ஒரு பெண்ணின் மனதிலிருந்து கொட்டப்பட்ட வார்த்தைகள். தமிழ்நாட்டிலே பிறந்து, வளர்ந்து, மணமுடித்தவுடன் அயல் நாட்டிற்குச் சென்று, அங்கேயே 32 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்ற ஒரு சகோதரியின் வார்த்தைகள்தான் இவை. செல்வச்செழிப்பிற்குக் குறைவில்லை. ஆனால், திருமணம் முடித்து 10 வருடங்களில் கணவர் இறந்துபோனார். அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை. உடன்பிறந்தோர் ஆதரவும், புகுந்த வீட்டினரின் ஆதரவும் இல்லை. எனவே, கடந்த 22 ஆண்டுகளாக தனிமையில் வாழ்வு. இதில் சிலமுறை வீட்டில் திருட்டு, இரண்டு முறை கார் விபத்து, இதனால் உடல்நலக்குறைவு, மனச்சோர்வு, வேலையில் தொய்வு என எதைத் தொட்டாலும் தொடரும் பிரச்சனைகள். இப்பிரச்சனைகள் அனைத்துக்கும் அடிப்படையில், தற்கொலையைப் பற்றி எண்ணுமளவு அச்சகோதரியை உந்தித் தள்ளுவது... அவர் அனுபவிக்கும் தனிமை.
இன்று நாம் சிந்திப்பது திருப்பாடல் 142. தனிமையில் தவிப்போரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் பாடல் இது. அதேசமயம் அத்தகையோருக்கு மருந்தாகவும் அமைந்துள்ள பாடல். இப்பாடலின் வரிகள், நம் வாழ்வின் அனுபவங்களைப் பிரதிபலிப்பதாய் ஒலிக்கின்றன.

இப்பாடலைப் புரிந்துகொள்ள இப்பாடல் எழுதப்பட்ட சூழல், மற்றும் இப்பாடலை எழுதிய தாவீது மன்னனின் மனநிலை ஆகியவற்றை அறிவது அவசியம்.
தன்னைவிட, மக்கள் மனதில் தாவீது அதிகம் இடம் பெற்றுவிட்டதைக் கண்டு பொறாமை கொண்ட மன்னன் சவுல், தாவீதைக் கொல்ல முயன்றார். சவுலிடமிருந்து தப்பிச்சென்ற தாவீது நாடோடி போல சுற்றி அலைந்தார். இவ்வாறு, அலைந்த வேளையில், தாவீது, பெரிய படையோடோ அல்லது குடும்பத்தோடோ செல்லவில்லை. தனிமையில்தான் சென்றார். தனித்துவிடப்பட்ட தாவீதை, சாவு துரத்திக்கொண்டே வந்தது. சவுலின் அரண்மனையிலிருந்து தப்பிய தாவீதை சவுலின் ஆட்கள் துரத்தினர். எனவே காத்திற்கு சென்றார். காத் அரசன் ஆக்கிசும் தாவீதைக் கொல்லத்தேடவே, அவர் அதுல்லாம் குகைக்கு சென்றார். அதுல்லாம் குகைக்கு தாவீதைத் தேடி சவுல் அரசனே வந்துவிடுகின்றார்.
தாவீதின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? யாராவது காப்பாற்ற மாட்டார்களா? எங்காவது தப்பித்து சென்றுவிடமாட்டோமா? என்று ஏக்கம்.... எப்பொழுது கொல்வார்களோ? என்ற பயம்... அருகிலிருந்து ஆறுதல் சொல்லவோ, தைரியமூட்டவோ யாரும் இல்லாத தனிமை... தன் தனிமையைப் போக்க இறைவன் ஒருவரால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தை தாவீது இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
இதோ, திருப்பாடல் 142:

திருப்பாடல் 142
ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன்.
என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்;
என் மனம் சோர்வுற்றிருந்தது; நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்; நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்; என்னைக் கவனிப்பார் எவருமிலர்; எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று; என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.
ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; 'நீரே என் அடைக்கலம்; உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.
என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்; ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்; என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்.
சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்; நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்; ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.
தாவீதின் தனிமையைப் பற்றி சிந்திக்கும் வேளையில், நம் வாழ்வில் நிலவும் தனிமை, அதன் காரணங்கள், விளைவுகள் ஆகியவை குறித்தும் சிந்திப்பது பயனளிக்கும்.

சிக்காகோ பல்கலைக்கழக உளவியல் துறை ஆய்வின்படி, துணை இல்லாத வாழ்வு, மணமுறிவு, துணையாளருடைய இறப்பு, போன்றவையே தனிமையின் முதன்மைக் காரணங்கள். இக்காரணங்களால் பாதிக்கப்படுவோர் அனைவருமே தனிமையில் துன்புறுவதில்லை. தனிமையில் துன்புறுவோருக்கு அடிப்படைக் காரணமாக அமைவது... அவர்கள் தங்கள்மீது கொண்டிருக்கும் தாழ்வான மதிப்பே (Low Self- Esteem) என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

தன்னால் முடியாது, தனக்குத் திறமையில்லை, ஆற்றலில்லை. தனித்து தன்னால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ இயலாது என்ற நிலையில் வாழ்பவர்கள் தாழ்ந்த தன்மதிப்புக் கொண்டவர்கள். பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், வாழ்க்கை துணை என இவர்கள் பிறரையே சார்ந்து வாழ்கிறார்கள். இவர்கள் குடும்பத்திலும், பொது வாழ்விலும் எதற்குமே முன்வராதவர்கள். தவறைக் கண்டறிந்து சரியானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பையே ஏற்படுத்திக்கொள்ளாத இவர்கள், தனிமை என்ற நோய்க்குப் பலியாகிறார்கள். இந்நோயினால் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, குழுக்களிலும், பலரும் கலந்துகொள்ளும் விருந்துகளிலும் பங்கெடுக்க அஞ்சுகிறார்கள். வாழ்க்கை என்ற போராட்டத்தில் சவால்களைச் சந்திக்க விரும்பாமல் ஓடி ஒளிகிறார்கள். இதனால் புது இடங்களுக்குச் செல்வதையும், புதுமனிதர்களை சந்திப்பதையும் தவிர்க்கிறார்கள். தனிமையே இவர்களுக்கு வாழ்வாகிறது. இதன்விளைவாக, அவர்களின் மன அழுத்தம் அதிகமாகிறது; மனச்சோர்வு அடைகிறார்கள். சிலர் மதுவிற்கு அடிமையாகிறார்கள்; சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; இன்னும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகையச் சீர்கேட்டை உருவாக்கும் தனிமை நோய்க்கு தீர்வுதான் என்ன? தீர்வுகளாக உளவியலாளர்கள் முன்வைப்பவை இதோ:
புதிய நண்பர்களை ஏற்படுத்தல், மனதிற்கு நிறைவைத் தரக்கூடிய சமூகப் பணி, அன்புப் பணி, ஆலயப்பணி போன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவது, ஒரு சராசரி நாளின் பெரும்பாலான நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்களில் செலவிடுவது, அதிலும் சிறப்பாக குழுவுடன் இணைந்து செயல்படுவது.... ஆகியவை உளவியலாளர்கள் நமக்கு முன்வைக்கும் தீர்வுகள்.

தனிமைக்கு மருந்துகளாக உளவியலாளர்கள் இன்று பரிந்துரைப்பவைகளை மூவாயிரம் ஆண்டுகளுக்குப் முன்னர் வாழ்ந்த தாவீது கடைபிடித்திருக்கிறார். தன்னைக் கொல்லத்தேடிய சவுலிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன்னந்தனியாக தப்பியோடிய தாவீது, தனிமையில் சோர்ந்துவிடவில்லை, விரக்தியில் துவண்டுவிடவுமில்லை. மாறாக, தன் வாழ்வை மாற்றக்கூடிய எல்லாம் வல்ல இறைவனிடம் செபிக்கிறார்; தனக்குப் புகலிடம் ஆகுமாறு மன்றாடுகிறார். இதோடு நின்றுவிடாமல், யாவே இறைவனின் திட்டத்திற்கு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருகிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், செபத்தோடு நின்றுவிடாமல், செபங்களுக்கு செயல்வடிவமும் கொடுக்கிறார். இறைவன் அவரது முயற்சிகளுக்கு ஆசியும் அளிக்கிறார்.

அதுல்லாம் குகையில் மறைந்திருந்த தாவீது மெல்ல, மெல்ல தன் குடும்பத்தாரையும், அவரது ஆதரவாளர்களையும் ஒன்று சேர்த்து ஒரு குழுவாக உருவாகிறார். இதைத்தான் சாமுவேல் முதல் நூல் 22: 1-2 சொற்றொடர்கள் இவ்வாறு சொல்கின்றன:
தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்கு தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர். ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.
தாவீது தனிமையில் தன்னை மாய்த்துக்கொள்ளவுமில்லை. சவுலிடமிருந்து தப்பிக்க முடியாது என்று சரணடையவுமில்லை. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகவும் இல்லை. மாறாக தொடர்ந்து போராடினார். இறுதியில் இஸ்ரயேலின் அரசரானார்.

அன்று வாழ்ந்த தாவீது மட்டுமல்ல, இக்காலத்திலும் தனிமைக்குப் பலியாகாமல் போராடி வெற்றிபெறுகின்ற மனிதர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi). தாழ்ந்த தன்மதிப்பிற்கு பலியாகிறவர்களில் பெரும்பாலானோர் பெண்களே என்ற புள்ளிவிவரத்தை புரட்டிப்போடப் பிறந்த இவர், மியான்மரிலே பல ஆண்டுகளாக நிலவி வரும் இராணுவ அடக்குமுறையை எதிர்த்து மக்களாட்சியைக் கொணரும் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதன் விளைவாக, 1990ல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆனாலும், இவர் தேர்தலுக்கு முன்னரே வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை. 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைவாழ்வில், இவரது கணவர் மற்றும் இவர் பெற்றெடுத்த இரு குழந்தைகளுடனும்கூட வாழ அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதியில்லை. இவர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், ஆங் சான் சூச்சி துவண்டுவிடவில்லை. தனிமை, கொடுமை எனச் சொல்லி தன் மக்களாட்சிக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கிவிடவில்லை.
அனைத்து நாடுகளின் கண்டனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவால் 2010ம் ஆண்டு நவம்பர் 13 சூச்சி விடுதலை செய்யப்பட்டார். 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றது இவரது கட்சி. இத்தனை ஆண்டுகள் தனிமையாக வீட்டுச் சிறையில் இருந்தாலும் தளராமல் வெற்றிக் கண்டார் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இந்த 15 ஆண்டுகளில் தனிமையில் அவர் அனுபவித்த மனத்துயரத்தை கணக்கிட முடியுமா? அவரைப் பார்த்து ஆச்சர்யபடுவதோடு நின்றுவிடாமல், அவரைப் போலவே மன உறுதியுடன் கண்ட கனவை நனவாக்க வேண்டும்.

ஒரு சில நேரங்களில் தனிமையில் வாடுவது வாழ்வின் எதார்த்தம். ஆனால் எல்லா நேரங்களிலும் தனிமையை உணர்வது தீர்க்கக்கூடிய உடல் மற்றும் மனநலக்குறைவு என்பதை அறிந்து கொள்வோம். தனிமையை வெல்வோம். தாழ்ந்த தன்மதிப்பு கொண்டு, தனிமையில் சிக்கித் தவிக்கும் சகோதர சகோதரிகளுக்காக செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.