2012-11-06 15:55:38

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அயர்லாந்து அரசின் சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு ஆயர்கள் ஆதரவு


நவ.06,2012. குழந்தைகளின் நலனும், பாதுகாப்பும் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல்களில் பெற்றோருக்குரிய இடத்தை அரசே கைப்பற்றி, குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்யும் அயர்லாந்து அரசின் சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு ஆயர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
பொது நலனின் பாதுகாவலர் என்ற முறையில் நெருக்கடியானச் சூழல்களில் பெற்றோருக்குரிய இடத்தை அரசே எடுத்துக் கொண்டாலும், அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் முன்னிறுத்தியதாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என அயர்லாந்து திருஅவை அறிவித்துள்ளது.
பெற்றோர் தங்கள் கடமைகளிலிருந்து தவறும்போது, அவர்களின் குழந்தைகளை, பொறுப்புடைய தம்பதியருக்குத் தத்து கொடுப்பது குறித்த சட்டத் திருத்தத்தையும் கொணரவிருப்பதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் திருமணத்தின் வழியாக, அவர்களின் குழந்தைகள் மீது இத்தம்பதியர் கொள்ளும் உரிமைகள் இப்புதிய சட்டத்தின் வழியாக எவ்வகை பாத்ப்பையும் உருவாக்காது என உரைக்கும் ஆயர்கள், பெற்றோரின் கடமைகளையும், பொறுப்பையும் வலியுறுத்துவதாகவே இச்சட்டத் திருத்தம் அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.