2012-11-06 16:04:27

காங்கோ மனித குல நெருக்கடியை களைய அழைப்பு


நவ.06,2012. மோதல்களால் 20இலட்சம் மக்கள் குடிபெயர்ந்துள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்றுவரும் மனிதகுல நெருக்கடிகளைக் களைய ஒன்றிணைந்த பதிலுரை தேவைப்படுவதாக ஐநா அதிகாரி ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் 24 இலட்சம் கோங்கோ மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக உரைத்த ஐநா அதிகாரி John Ging, இவர்களின் வாழ்வைக் காப்பாற்ற தேவைப்படும் 79 கோடியே 10 இலட்சம் டாலர்களுக்கு விண்ணப்பித்துள்ளதில் இதுவரை 42 கோடியே 90 இலட்சம் டாலர்களே கிட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆண்கள் கொல்லப்படுவது, பெண்கள் கற்பழிக்கப்படுவது மற்றும் சிறார்கள் கட்டாயமாக ஆயுத மோதல்களில் பங்கெடுக்க வலியுறுத்தப்படுவது போன்றவை தொடர்வதாக எடுத்துரைத்த ஐநா அதிகாரி Ging, எண்ணற்றோர் அண்மை நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டாவில் குடியேறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
காங்கோவின் உள்நாட்டு மோதல்களால் ஏறத்தாழ 45 இலட்சம் பேர் போதிய உணவின்மையால் துன்புறுகின்றனர். 10 இலட்சம் குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் துன்புறும் அதேவேளை, 27,000 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.