2012-11-06 16:14:54

இலங்கை அரசு ஐநாவில் வெற்று வாக்குறுதிகளையே முன்வைத்தது


நவ.06,2012. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசு முன்வைத்துள்ள 'வெற்று' உறுதிமொழிகளை ஐநாவின் உறுப்பு நாடுகள் நம்புவதை நிறுத்த வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் காட்டியுள்ள பல விடயங்களுக்கும் உண்மையில் இலங்கையில் நிலவும் களநிலைமைகளுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா ஃபாஸ்டர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நீதித்துறைக்கூட பாதுகாப்புடன் இல்லை என்பதையே அண்மைக்காலமாக அங்கு நடந்துவரும் சம்பவங்கள் காட்டுவதாக கூறிய அவர், அப்படியென்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் ஃபாஸ்டர் கேள்வி எழுப்பினார்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் பெயர் பதிவு நடைமுறையொன்றை பேணுவதாக இலங்கை அரசு மனித உரிமைகள் கவுன்சிலின் மீளாய்வில் கூறியிருந்தாலும், உண்மையில் பல குடும்பங்கள் இன்னும் அங்கு தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், அப்படியொரு பதிவுப் பொறிமுறையே அங்கு இல்லை என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் கூறுகிறது.
மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்ற நிலையில், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கக்கூடிய நடைமுறை எதுவும் இன்னும் இல்லை என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் நடந்திருக்கின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய இராணுவ நீதிமன்றம் அமைத்துள்ளதாக அரசு கூறுவது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றும், இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டை அதே இராணுவமே விசாரிப்பது எந்தளவுக்கு சரியான நடவடிக்கை என்று தாம் ஐநாவின் உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா ஃபாஸ்டர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.