2012-11-05 15:48:57

வாரம் ஓர் அலசல் - அன்புணர்வுத் தொடுதலில் உள்ள மந்திரம்


RealAudioMP3 நவ.05,2012. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகர மருத்துவமனையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. குழந்தை வரத்துக்காக 12 ஆண்டுகளாய் ஏங்கிய ஒரு தாய்க்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைப்பேறு கிடைத்தது. குழந்தையைப் பெற்றெடுக்கும் அந்த நாளும் வந்தது. சிட்னி மருத்துவமனை ஒன்றில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தத் தாய். தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்த அந்தக் குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்ப்பதற்கு ஆவலோடு ஏங்கினார். குழந்தை இறந்தே பிறந்தது என்று சொல்லி அதனைத் தாயிடம் காட்டுவதற்குத் தயங்கினார்கள் மருத்துவர்கள். ஆனால் அந்தத் தாயோ, எனது குழந்தையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார். இறந்து பிறந்த அந்தக் குழந்தையைத் தாயிடம் கொண்டுவந்து கொடுத்தனர். அவரும் தனது குழந்தையைத் தன் மார்பில் அரவணைத்து அன்பினால் முத்தமழை பொழிந்து கொண்டிருந்தார். இறந்த குழந்தையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அந்தத் தாயை அருகிலிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரின் ஆச்சரியம் திடீரெனப் பன்மடங்கானது. ஏனெனில் இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்திருந்த குழந்தை திடீரென அழத் தொடங்கியது. உயிர் பெற்றது. அங்கு நின்று கொண்டிருந்த அனைவருக்குமே வியப்பு. கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் குழந்தையைப் பார்த்தனர். உண்மைதான். ஒரு தாயின் அன்பான தொடுதல் குழந்தைக்கு உயிர்வாழ்வு கொடுத்துள்ளது. அன்புணர்வோடு தொடுதலில் வாழ்வு நிச்சயம் உண்டு.

அன்புணர்வோடு தொடுதலில் வாழ்வு நிச்சயம் உண்டு. இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களைச் சொல்லலாம். ஒருவர் அன்புணர்வோடு மற்றவரைத் தொடும் போது, தடவிக் கொடுக்கும்போது, அதுவும் ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கும் போது, இந்தத் தொடுதல் சாதிக்கும் அற்புதங்கள் அத்தனை அத்தனை. யு டியுப்பில் ஓர் ஒளிக்காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்டில் ஒரு தாய்யானைக்குத் தாகம் எடுக்கிறது. அந்தக் காட்டில் இருந்த குளத்தில் தன் தாகத்தை தணிப்பதற்காகத் தண்ணீர் குடிக்கச் சென்றது தாய் யானை. கூடவே தனது குட்டியையும் கூட்டிச் சென்றது. தாய் யானை தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு முதலை அந்த யானையின் தும்பிக்கையைக் கடிக்கிறது. அதைக் கண்ட குட்டியானை துடிக்கிறது. தவிக்கிறது. முதலைமீது ஆத்திரமடைகிறது. தாய் யானை தன்முழுபலதுடன் அந்த முதலையை அந்தக் குளத்தில் இருந்து தரைக்கு இழுக்கிறது. தரைக்கு இழுத்தவுடன் அந்தக் குட்டியானை தன் தாயைத் தாக்கிய அந்த முதலைமேல் கடும் கோபத்துடன் விழுந்து, தனது பலத்தையெல்லாம் சேர்த்து அமுக்குகிறது. குட்டி யானையின் அந்த அமுக்கலில் முதலை தன் வாயில் கவ்வி இருந்த தாய் யானையின் தும்பிக்கையை விடுவிக்கிறது. அந்தக் குட்டியானையின் பாசம்! தவிப்பு! ஆத்திரம்! இவை அனைத்தையும் அந்த ஒளிப் படங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. ஒரு தாயின் பாசத்தைப் பார்த்திருக்கிறோம், ஆனால் ஒரு குழந்தையின் பாசத்தை இந்த ஒளிப் படங்களில் பார்த்தபோது உடம்பெல்லாம் புல்லரித்தது.


ஒருமுறை சீடர் ஒருவர் புத்தரிடம், “குருவே, தாங்கள் கண்ட எல்லாவற்றையும் எங்களிடம் கூறிவிட்டீர்களா?, இல்லை, ஏதாவது சொல்லாமல் வைத்துள்ளீர்களா?” என்று கேட்டார். அப்போது புத்தர் ஒரு கையால் சிறிய இலைகளைக் கிள்ளிக் கொண்டே, “நான் இதுவரை சொன்னவை இந்த இலைகளின் அளவு. சொல்லாதவை இந்த கானகத்தின் அளவு. ஆனால் இந்த இலைகளைச் சரிவர நீங்கள் புரிந்து கொண்டால் கானகத்தின் முழுபரப்பையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்” என்று பதில் சொன்னார். ஞானி கபீரும், “மரத்தை நீ புறக்கணித்தால் உன்னால் எப்படிக் காட்டைக் காண முடியும்?. காடு என்பதே மரங்களின் தொகுப்புதானே!. மனிதர்களை அலட்சியப்படுத்திவிட்டு உன்னால் எப்படி இறைவனைக் காண முடியும்?. கண்ணில்படும் எல்லா உருவங்களையும் நேசித்தால்தான் உருவங்களில் உள்ளடங்கிய அருவமான அவன் தென்படுவான்” என்று சொல்கிறார். புனித யோவானும், “கண்ணால் காணும் சகோதரனை அன்பு செய்யாமல், காண முடியாதக் கடவுளை உன்னால் எப்படி அன்பு செய்கிறேன் எனச் சொல்ல முடியும்?” எனக் கேட்கிறார். இயேசுவின் போதனையே அன்புதானே. உலகின் எல்லா மதங்களின் போதனைகளின் சாரமே அன்புதான்.

ஞானி ஹிலாசிடம் ஒருவர் சென்று, “நான் ஒற்றைக் காலில் நிற்பேன். நான் காலை கீழே இறக்குவதற்கு முன்பாக வேதம் முழுவதையும் நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கேட்டார். அதற்கு ஞானி ஹிலாசி, “வேதத்தை ஒரே வரியில் சொன்னால் அன்பு. இன்னும் வேதத்தை விளக்கினால், நீ எதை விரும்புகிறாயோ அதைப் பிறருக்குச் சொல். எது உனக்கு விருப்பமில்லையோ அதைப் பிறருக்குச் செய்யாதே”. அதேபோல், நான்கு வேதங்களின் சாரம் என்ன என்று ரிக் வேதத்தில் முனிவரிடம், ஒரு மன்னர் கேட்டார். அதற்கு அந்த முனிவர், “நேசி” என்றார். “வாழ்வை நேசி. உலகை நேசி. உயிர்களை நேசி. அதுவே இறைவனின் நேசம்” என்றார். இந்தப் பூமியில் எல்லாரும் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். மடிகிறார்கள். ஆனால் அன்புள்ள மனிதர் மட்டுமே மரணத்தின் பின்னும் நிலைத்து நிற்கிறார்கள், எல்லாராலும் பேசப்படுகிறார்கள்.

அருளாளர் அன்னை தெரேசா என்ற அற்புத மனிதரை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ஏனெனில் அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்தவர் அன்னை தெரேசா. அவரது அன்புணர்வுத் தொடுதலில் ஆனந்தமாய் உயிர்நீத்தவர்கள் எத்தனையோ ஆதரவற்ற அநாதைகள், கைவிடப்பட்ட முதியோர். அந்த உன்னத அன்னையின் மடியில் கடைசி உயிர்மூச்சை இன்பமாய்விட்டவர்கள் எத்தனையோ ஏழைகள். நாங்கள் உலகில் வாழ்ந்த போதுதான் அன்புக்காக ஏங்கினோம், சாகும் இந்த நேரத்திலாவது உங்கள் அன்புமழைப் பொழிவில் சாகிறோம் என்ற சொற்களை அன்னை தெரேசாவிடம் சொன்னவர்கள் பலர். இன்றும் உலகில் பல அன்னை தெரேசாக்கள் தொடர்ந்து அன்புப்பணி செய்து வருகிறார்கள். இந்த தெரேசாக்களின் அன்புணர்வுத் தொடுதலால் பலர் வாழ்வு பெற்று வருகிறார்கள்.

வார்த்தைகளுக்குத்தான் எத்தனை வலிமை! இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்த உரோமையில் வேலை முடிந்து மாநகரப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்தில் பயணிகள் நெருக்கிக் கொண்டு நின்றார்கள். இந்த உரோமையில் பல நாட்டவர், பல இனத்தவர், பல மொழியினர் என ஓர் உலகத்தையே தினமும் பேருந்தில் பார்க்க முடியும். இந்நகரில் இறங்கவேண்டிய நிறுத்தம் வருவதற்கு முன்னரே பொத்தானை அழுத்திவிட வேண்டும். அப்போதுதான் நிறுத்தம் வந்ததும் ஓட்டுனர் பேருந்தை நிறுத்துவார். அன்று ஓர் ஆப்ரிக்கர் அவர் இறங்கவேண்டிய நிறுத்தம் வருவதற்கு முன்பு கையை நீட்டி பேருந்தில் பொத்தானை அழுத்தினார். பேருந்தில் மக்கள் நெருசலாக நின்று கொண்டிருந்ததால் அந்த மனிதரது கை இலேசாக ஓர் இத்தாலியப் பெண்ணைத் தொட்டுவிட்டது. அவ்வளவுதான். தகாத வார்த்தைகளை வாங்கிக் கட்டினார் அந்த மனிதர். அவர் வேண்டுமென்றே செய்யவில்லை என்பது அதைப் பார்த்த எல்லாருக்குமே தெரியும். கூனிக்குறுகிப் போன அந்த ஆப்ரிக்கர் வாய் பேசாது பேருந்திலிருந்து இறங்கி விட்டார். அவர் இறங்கிப் போனபிறகும்கூட அந்தப் பெண்ணின் வசைமழை ஓய்ந்த பாடில்லை. பொருளாதாரத்தில்தான் நாடு கடும் நெருக்கடியை எதிர்நோக்குகிறதென்றால், அன்புக்கும் பஞ்சம் வந்துவிட்டதோ என்று மனது சிந்தித்தது. இதற்காக எல்லா இத்தாலியர்களும் இத்தகையவர்கள் என்று சொல்லவில்லை. எத்தனையோ மனிதமிக்க பல மனிதர்கள் இருக்கிறார்கள்.

அன்பர்களே, அன்பை இழந்தவர் வாழ்வை இழக்கிறார். அன்பைப் பெறுபவர் வாழ்வைப் பெறுகிறார். இதுதான் நிதர்சனம். சிட்னியில் இறந்து பிறந்த குழந்தை தாயின் அன்பில் வாழ்வு பெற்றது. அன்னைதெரேசாவின் அன்பு வருடலில் நடைபிணங்களாக நடமாடியவர்கள் மனிதர்களாக இறந்தார்கள். ஆசிரியரின் அன்பான கண்டிப்பில் மாணவர்கள் உய்வு பெறுகிறார்கள். இப்படிச் சொல்லும்போது, தமிழகத்தின் மயிலாடுதுறை அருகே உள்ள அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றி அப்பள்ளி மாணவர்கள் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. அந்தப் பள்ளியில் அன்பழகி ஆசிரியர், தங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் என்று அண்மையில் அப்பள்ளி மாணவர்கள் புகழ்ந்துள்ளார்கள். எங்கள் அன்புக்குரிய 'அன்பழகி டீச்சர் என்று அழைக்கும் மாணவர்கள் அந்த ஆசிரியர் பற்றிப் போட்டி போட்டுக்கொண்டு ஒரு பத்திரிகையிடம் புகழ்ந்துள்ளார்கள். அவர்களில் அருண்குமார் என்ற மாணவர் சொன்னார் - அன்பழகி டீச்சர் ரொம்பக் கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, யாரையும் அடிக்கவோ திட்டவோ மாட்டாங்க. அன்பாலயே திருத்துவாங்க என்று.

அன்புக்கு வேற்றுமை இல்லை. பகைமை இல்லை. ஆணவம் இல்லை. சுயநலம் இல்லை. அன்பு இருக்கும் இடம் ஆண்டவன் குடியிருக்கும் கோவில். அரபு இலக்கியத்தில் ஓர் அற்புதமான செய்தி உள்ளது. தனது மத நெறிப்படி வாழந்து வந்த சுலைமான் என்பவர் இறந்தபின்னர் சொர்க்கத்தில் நிறுத்தப்பட்டார். இறைவன் அவரிடம், “சுலைமான் இந்த சொர்க்கம் உனக்கு எப்படிச் சாத்தியமானது?” என்று கேட்டார் அதற்குச் சுலைமான், “ஆண்டவனே, உம்மை நாள்தோறும் மறவாமல் 5 முறை தொழுதேன், அதற்காகவா?” என்று கேட்டார். அதற்கு இறைவன், “இல்லை மகனே. ஒரேயொரு சமயம் மட்டும் நீ என்னைத் தொழமுடியாமல் போனது, அதற்காகத்தான் சொர்க்கம்” என்றார். சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை. “மகனே, ஒரு குளிர்காலத்தில் இளங்காலைப் பொழுதில் நீ தொழுகைக்கு வந்து கொண்டிருந்தாய். ஆனால் வழியில் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த ஓர் உயிருக்குத் தேவையான உதவிகளைச் செய்தாய். நீ அந்த உதவியைச் செய்து முடித்த போது தொழுகை முடிந்து விட்டது. உயிர்களிடம் நீ காட்டிய பெருங்கருணைக்குப் பரிசாக நான் தருவது இந்தச் சொர்க்கப் பரிசு” என்றார் கடவுள்.

அன்பில்லா வாழ்வு அர்த்தமில்லாதது, வாழத் தகுதியில்லாதது. ஒரு சிறிய கனிவான சொல், ஒரு புன்சிரிப்பு, ஆறுதலான ஓர் அரவணைப்பு, ஓர் அன்பானத் தட்டிக் கொடுத்தல் இவற்றால் ஒருநாளில் ஒருவரையாவது வாழ வைக்க முயற்சிப்போம். அன்புணர்வோடு நாம் செய்யும் சிறிய செயலும் பேசும் ஒரேயொரு சொல்லும் பார்க்கும் ஒரு பார்வையும் பலரைக் குணமாக்கும். இதனை இந்த நொடிப் பொழுதே அருகில் இருப்பவரிடம் முயற்சித்துப் பார்க்கலாமே.








All the contents on this site are copyrighted ©.