2012-11-05 15:47:59

புனித பூமியில் உள்ள புனித கல்லறைக் கோவில் நிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் ஆபத்து


நவ.05,2012. புனித பூமியில் உள்ள புனிதக் கல்லறைக் கோவில் நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட வேண்டியிருக்கும் என்று கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புனிதக் கல்லறைக் கோவிலில் பயன்படுத்தப்பட்டு வரும் தண்ணீர் வசதிக்கு, கோவில் நிர்வாகம் கடந்த 15 ஆண்டுகள் பணம் செலுத்தவில்லை என்ற காரணம் காட்டி, நிர்வாகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தொன்றுதொட்டு, இக்கோவிலின் தண்ணீர் பயன்பாட்டுக்கு வரிகள் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. 1990ம் ஆண்டு தண்ணீர் விநியோகத்தை Hagihon என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டபின், இந்நிறுவனத்திற்குக் கோவில் நிர்வாகம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகள் இக்கோவில் செலுத்தவேண்டிய தொகை 1.4 மில்லியன் பவுண்டுகள் - அதாவது, 9 கோடியே 80 இலட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கோவிலின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால், அங்கு பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட குருக்கள், 2000க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஆகியோருக்குத் தரவேண்டிய சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.