2012-11-05 15:36:53

திருத்தந்தையின் மூவேளை செப உரை


நவ.05,2012. இறைவன் மீதான அன்பும் அடுத்திருப்பவர் மீதான அன்பும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை மற்றும் ஒன்றுக்கொன்று உறவுடையவை என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மற்றவர்களுக்காக நாம் நம்மை திறக்கும்போது, கடவுளை அறிவதற்காகவும் நம்மை நாம் திறக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, கட்டளைகளுள் எல்லாம் மிகப்பெரியதாக இறைவன் மீதான அன்பையும் அயலார் மீதான அன்பையும் இயேசு சுட்டிக்காட்டியதை இங்கு எடுத்துரைத்தார்.
பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஏறத்தாழ 50 ஆயிரம் பேருக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து தன் செய்தியை வழங்கினார் திருத்தந்தை.
எவ்வாறு ஒரு குழந்தை தன் தாய் தந்தையுடனான நல் உறவிலிருந்து அன்புகூரக் கற்றுக்கொள்கின்றதோ, அதுபோல் நாமும் இறைவனுடன் கொள்ளும் ஆழமான உறவிலிருந்து பெறப்பட்ட அன்பெனும் கட்டளையை முற்றிலுமாக நடைமுறைக்குக் கொணரவேண்டியது அவசியம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் அன்பை, திருப்பலியின்போது இயேசு நமக்கும் வழங்குவதைப் பெற்று அத்திருஉணவால் ஊட்டம்பெற்றவர்களாக, இயேசு நம்மை அன்பு கூர்வதுபோல் நாமும் ஒருவரை ஒருவர் அன்புகூர்கிறாம் என மேலும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.