2012-11-05 15:33:49

காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் 118வது தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்


நவ.05,2012. எகிப்தில் உள்ள காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் 118வது தலைவராக Behayraவின் ஆயர் Amba Tawadraus இஞ்ஞாயிறன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பில் உள்ளவர்கள் 'அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை' என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டு மார்ச் மாதம் 17ம் தேதி இறையடி சேர்ந்த 'அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை' மூன்றாம் Shenoudaவின் மறைவிற்குப்பின், இஞ்ஞாயிறன்று கெய்ரோ நகரில் நடைபெற்ற ஒரு தேர்தலில் ஆயர் Tawadraus தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1952ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி பிறந்த ஆயர் Tawadraus, தனது 60வது பிறந்தநாளன்று காப்டிக் ரீதி திருஅவையின் தலைமைப் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் அளித்த மானியத்துடன் மருத்துவத் துறையில் கல்வி பயின்ற Amba Tawadraus, தனது 31வது வயதில் துறவு வாழ்வை மேற்கொண்டு, 34வது வயதில் குருவாகவும், 1997ம் ஆண்டு தனது 45வது வயதில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயர் Tawadraus அவர்களின் தெரிவு கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆயர் Tawadraus, அலெக்சாந்திரியா, மற்றும் அனைத்து ஆப்ரிக்காவின் காப்டிக் ரீதி திருஅவையின் தலைவராக இம்மாதம் 18ம் தேதி இரண்டாம் Tawadraus என்ற பெயருடன் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.