2012-11-02 15:16:34

சுயநலக் கலாச்சாரத்தின் விளைவுகளை இந்தியாவின் துறவியரிடையிலும் காண முடிகிறது


நவ.02,2012. சுயநலக் கலாச்சாரத்தின் விளைவுகளை துறவு வாழ்விலும் காண முடிகிறது என்றும், இதனால் இந்தியாவின் துறவியரிடையே அர்ப்பண மனப்பான்மை குறைந்து வருகிறது என்றும் இந்தியத் துறவியரின் கருத்தரங்கில் கூறப்பட்டது.
கடந்த ஞாயிறு முதல் இப்புதன் முடிய ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அனைத்திந்திய துறவியர் கூட்டத்தில், இந்தியாவின் இருபால் துறவியரும் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆன்மீகத்தையும் அறிவியல் முன்னேற்றங்களையும் சரியான முறையில் இணைப்பதற்கு தற்போது பயிற்சியில் இருக்கும் துறவியருக்குத் தகுந்த வழிகாட்டுதல் அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
வெளி உலகிலும், சமுதாயத்திலும் காணப்படும் பல்வேறு பிரிவுச் சுவர்கள் துறவுச் சபைகளிலும் காணப்படுவது வேதனை என்றும், இச்சுவர்களை தகர்த்து, பாலங்கள் கட்டுவது அவசியம் என்றும் கருத்தரங்கின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தியாவில் 334 துறவியர் சபைகளைச் சார்ந்த 1,25,000 இருபால் துறவியர் பணி புரிகின்றனர். கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், சமுதாய நிறுவனங்கள் மூலம் பணி செய்யும் இருபால் துறவியரில் 822 பேர் தலைமைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.