2012-11-02 15:15:30

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், கரிபியன் நாடுகளுக்கும் ஐ.நா.வின் உதவிகள் உறுதி


நவ.02,2012. Sandy சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவருக்கும், கரிபியன் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கும் ஐ.நா.வின் உதவிகள் உண்டு என்ற உறுதியையும் வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் எண்ணங்களையும் செபங்களையும் இணைப்பதாகக் கூறிய பான் கி மூன், இயற்கைப் பேரிடர்களின் விளைவுகளைக் குறைக்கும் பாதுகாப்பான வழிகளை அனைத்து நாட்டின் அரசுகளும் தேடவேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்.
"ஒரு தலைமுறையில் ஒரு முறையே வரும் சூறாவளி" இதுவென ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டுள்ள Sandy சூறாவளியில் இதுவரை 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
நியூயார்க் நகரைத் தாக்கிய இச்சூறாவளியால் ஐ.நா.வின் தலைமைச் செயலகமும் பாதிக்கப்பட்டது என்றும், இதுவரை ஐ.நா. வரலாற்றில் இல்லாத வகையில், மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்த தலைமையகம் மீண்டும் இவ்வியாழனன்று செயல்படத் துவங்கியது என்றும் ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.