2012-11-01 15:39:05

இம்மாதம் 11ம்தேதி இலங்கை திருஅவையில் 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு'


நவ.01, 2012. கருக்கலைப்புக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இம்மாதம் 11ம்தேதியை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு' என அறிவித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
இச்செவ்வாயன்று வெளியிட்ட மேய்ப்புபணி சுற்றறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு' இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படுவது குறித்த முழு விவரங்கள் இலங்கையின் அனைத்துக் கோவில்களிலும் இம்மாதம் 4ம் தேதி விசுவாசிகளுக்கு வழங்கப்படவேண்டும் என அனைத்துக் குருக்களையும் துறவறத்தாரையும் விண்ணப்பித்துள்ளனர்.
கருக்கலைப்பு என்பது எத்தகையச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது மட்டுமல்ல, இத்தகையப் பாவச்செயலில் ஈடுபடுவோர் திருஅவையிலிருந்து நீக்கிவைக்கப்படும் ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர் என மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
இலங்கையில் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சிகள் குறித்து வன்மையான கண்டனத்தையும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.