2012-10-31 15:12:34

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக். 31, 2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்குக்கடற்கரைப்பகுதியில் புயலுடன் கூடிய மழை, இலங்கை கடற்கரைப்பகுதியில் மழை, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரப்பகுதியில் புயல்மழை பாதிப்பு என பல பகுதிகள் மழையின் பாதிப்பைக் கண்டுவரும் இந்நாட்களில், உரோம் நகரமும் மழையில் நனைந்துகொண்டுதான் இருக்கிறது. செவ்வாய் இரவு பெய்த மழை, புதன் காலையும் தூறலாகத் தொடர்ந்துகொண்டிருக்க, ஏற்கனவே திட்டமிருந்தபடி திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. அவ்வப்போது இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தமையால், திருப்பயணிகள், குடைகளைத் தாங்கியவர்களாக இம்மறைபோதகத்தில் கலந்துகொண்டனர்.
நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக்கல்வித் தொடரில், விசுவாசம் என்பது தனிப்பட்ட மனிதரின் ஆழ்ந்த அனுபவம் என்பதைக் கண்டோம், எனத் தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை. நம் வாழ்வை மாற்றியமைத்து அதனை வளப்படுத்தும் இறைக்கொடையே விசுவாசம். அதேவேளை, விசுவாசம் எனும் கொடையானது திருஅவை சமூகத்தில், அச்சமூகம் வழியாகவே வழங்கப்படுகிறது. திருமுழுக்கில் நான் திருஅவையின் விசுவாசத்தைப் பெற்று அதை எனக்கானதாக உரிமைப்படுத்திக்கொள்கிறேன். விசுவாச அறிக்கையை வெளியிடுவதிலும், திருவருட்சாதனங்களை ஒன்றிணைந்து கொண்டாடுவதிலும் என்னுடைய தனிப்பட்ட விசுவாசம், தன் வெளிப்பாட்டைக் கண்டுகொள்கிறது. தூய ஆவி எனும் கொடை வழியாக கிறிஸ்துவில் நாம் வாழும் புதிய வாழ்வு, திருஅவை சமூகத்துக்குள் பெறப்பட்டு ஊட்டமளிக்கப்படுகிறது. இவ்வகையில் பார்த்தால், திருஅவை நம் தாயாக உள்ளார். புனித சிப்ரியன் கூறுவதுபோல், "திருஅவையைத் தாயாகக் கொள்ளாத எவரும், கடவுளைத் தந்தையாகக் கொள்ளமுடியாது". திருஅவையின் உயிருள்ள பாரம்பரியத்தில் உறைந்திருக்கும் நாம், நாம் பெற்ற விசுவாசத்தை நடைமுறைப்படுத்தி அதில் வளர்வதுடன், இவ்வுலகில் இயேசுவின் ஒளி மற்றும் அமைதியின் கலங்கரை விளக்குகளாகத் திகழ்வோமாக.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதன் இறுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செபங்களுக்கு உறுதிகூறியதுடன், அவர்களுக்காக உழைக்கும் அனைத்துத்தரப்பினருடன் தன் ஒருமைப்பாட்டையும் வெளியிட்டார். பல்வேறுமொழிகளில் புதன்மறைபோதகத்தை வழங்கியபின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.