2012-10-31 15:28:07

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித அல்போன்சுஸ் ரொட்ரிக்கெஸ்


அக்.31,2012. கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர்களாக அறிவிக்கப்படுபவர்கள் தூய வாழ்வு வாழ்ந்த மனிதர்கள். இவர்கள் சாதாரண வாழ்க்கையை, அசாதாரண வழியில் வாழ்ந்த மனிதர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென இறைவன் கொடுத்துள்ள கொடைகளைப் பயன்படுத்தி அவர் விரும்பும் விதத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை எல்லாக் காலங்களில் வாழ்வோருக்கும் ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது. இவர்களது திருவுருவங்களை ஆலயங்களிலும் பிற இடங்களிலும் பார்க்கும்போது இவர்களது வாழ்க்கைமுறை மட்டுமல்ல, இவர்கள் போல நாமும் வாழ வேண்டும் என்ற உள்தூண்டுதலும் கிடைக்கிறது. இந்தப் புனிதர்களால் அவர்கள் வாழ்ந்த காலங்களில் திருஅவையிலும் நாட்டிலும் பல திருப்புமுனைகள் இடம்பெற்றுள்ளன. நாடாளும் மன்னர்கள் முதல் சாமானிய மனிதர்வரை, வாழ்க்கையில் மனமாற்றம் அடைந்துள்ளார்கள். பல பலன்களைப் பெற்றுள்ளார்கள். பல புனிதர்கள், நாடுகளுக்கு, கண்டங்களுக்கு, குறிப்பிட்ட பகுதிகளுக்குப் பாதுகாவலர்கள் எனப் போற்றப்படுவதிலிருந்தும், இவர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படும் திருவழிபாடுகளில் நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்வதிலிருந்தும் இதனை அறியலாம். இந்த அக்டோபர் 21ம் தேதி கதேரி தெகாவிட்டா புனிதராக அறிவிக்கப்பட்ட திருவழிபாட்டில் கானடா நாட்டுப் பிரதமர் கலந்து கொண்டார். ஏனெனில், அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த புனித கதேரி தெகாவிட்டா கானடாவுக்குப் பாதுகாவலர். இந்தப் புனிதர்கள் போன்று நாம் ஒவ்வொருவரும் புனிதராக வாழுமாறு இறைவன் அழைக்கிறார். நவம்பர் 01, அனைத்துப் புனிதர்கள் விழா. அருள்நிலையில் இறந்த அனைத்துக் கிறிஸ்தவர்களையும் நினைவுகூரும் நாள். புனிதமான வாழ்வு வாழ்ந்து, அதேநேரம், புனிதராகப் பொதுப்படையாக அறிவிக்கப்படாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நவம்பர் முதல் தேதியன்று நினைவுகூருகிறோம்.

யாரும் புனிதராகலாம் என்பதற்கு பலரது வாழ்க்கைமுறைகள் சான்றுகளாக இருக்கின்றன. ஏறக்குறைய 46 ஆண்டுகள் வாயில்காப்போன் வேலை செய்த இயேசு சபை அருள்சகோதரர் புனித அல்போன்சுஸ் ரொட்ரிக்கெஸ் புனிதராக வாழ்ந்திருக்கிறார். இவர் அதிகம் படிக்காதவர், துன்பம் என்றால் என்ன என்பதை அதிகமாகவே அனுபவித்திருப்பவர். ஆனால் இவர் கடவுளன்பிலும், பெரியவர்களுக்குப் பணிந்து நடப்பதிலும், அன்னைமரியாமீது பக்தி கொண்டிருப்பதிலும் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். ஒருமுறை இவர்களது இயேசு சபை மாநில அதிபர் புனித அல்போன்சுஸ் ரொட்ரிக்கெஸ் இருக்கும் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரைச் சாப்பாட்டு நேரத்தில் கிரேக்கத்தில் ஒரு சிறிய மறையுரை நிகழ்த்தச் சொல்லியிருக்கிறார். புனித அல்போன்சுஸ்க்குக் கொஞ்சம் இலத்தீன் தெரியும். ஆனால் கிரேக்க மொழி தெரியவே தெரியாது. இருந்தபோதிலும், தலைவர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக மறையுரை நிகழ்த்தும் மேடையில் ஏறி ஒரு நிமிடத்துக்கு, நிதானமாக, ஆனால் கம்பீரமாக, “ஆண்டவரே இரக்கமாயிரும், கிறிஸ்துவே இரக்கமாயிரும், ஆண்டவரே இரக்கமாயிரும்” என்று திருப்பலியில் நாம் சொல்லும் “Kyrie elesion! Christe elesion! Kyrie elesion!” என்ற செபத்தை இலத்தீனில் சொன்னதாக வரலாறு. “இறைவனுக்காகத் துன்ப சோதனைகளைத் தாங்கிக் கொள்ளும் சிலுவைப்பாதை, வான்வீட்டுக்கான வழி” என்று சொன்னவர் புனித அல்போன்சுஸ் ரொட்ரிக்கெஸ்.

அல்போன்சுஸ் ரொட்ரிக்கெஸ், 1532ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி தென் இஸ்பெயினில் கம்பளி துணி வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 23 வயது நடந்த போது இவரது தந்தை ரொட்ரிக்கெஸ் இறந்தார். இதனால் படிப்பை விட்டுவிட்டுத் தனது தந்தையின் தொழிலைச் செய்யத் தொடங்கினார். 26வது வயதில் மரியா சுவாரெஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் அவரது மனைவியும், மகளும், தாயும் அடுத்தடுத்து இறந்தனர். இவர் தனது 31வது வயதில் விதவையானார். அதேநேரம் தொழிலும் மந்தமடைந்தது. எனவே கம்பளித் துணிக்கடையை விற்றுவிட்டு தனது மகனோடு சகோதரியின் வீட்டில் வாழத் தொடங்கினார். அங்குச் செபத்திலும் தபத்திலும் நாள்களைச் செலவழித்தார். இறைவன் தன்னை பசும்புல் மேய்ச்சலுக்கும், நீரருவிக்கும் அழைப்பதாக உணர்ந்தார். தனது மகனும் இறக்கவே ஏதாவது ஒரு துறவற சபையில் சேர நினைத்தார். இவருக்கு 10 வயது நடந்தபோது இவரது வீட்டில் இரண்டு இஸ்பானிய இயேசு சபைக் குருக்கள் வந்து தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவரான அருளாளர் பீட்டர் ஃபேபர், அல்போன்சுஸை புதுநன்மைக்குத் தயார் செய்தார். எனவே ஏற்கனவே தொடர்பு இருந்த இயேசு சபையில் சேர விரும்பினார். படிப்பு அதிகம் இல்லாததால் இயேசு சபையில் சேர பல தடங்கல்களை எதிர்கொண்டார். இயேசு சபையில் சேர்ந்தால் குருவாக முடியாது, சகோதரராகவேதான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு இணங்கிய இவர், தனது 39வது வயதில், 1571ம் ஆண்டு சனவரி 31ம் தேதி இயேசு சபையில் சேர்ந்தார்.

மஹோர்சாவிலுள்ள இயேசு சபை கல்லூரியில் வாயில்காப்போர் வேலையே இவருக்குக் கொடுக்கப்பட்டது. மஹோர்சா கல்லூரியில் வாழ்ந்த பல இயேசு சபை இளம் மாணவர்கள் இவரிடம் ஆலோசனைகள் பெற்றவர்கள். இவரது ஆலோசனையின்படியே, இயேசு சபை அருள்தந்தை புனித பீட்டர் கிளாவர், இலத்தீன் அமெரிக்காவில் ஆப்ரிக்க அடிமைகள் மத்தியில் பணியாற்றச் சென்றார். “நமது இஸ்பெயின் நாட்டினர் பண ஆசையினால் அமெரிக்கா சென்று குடியேறியிருக்கின்றனர். ஆப்ரிக்காவிலிருந்து கப்பல் கப்பலாக ஆயிரக்கணக்கில் கொண்டுவரப்படும் அடிமைகளை இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர். அந்த அடிமைகளின் ஆன்மாக்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நூற்றுக்கணக்கில் அடிமைகள் இறக்கின்றனர். அங்குதான் உங்களது குருத்துவப்பணி தேவைப்படுகின்றது. அங்குச் செல்லுங்கள்” என்று பீட்டர் கிளாவரிடம் சொன்னவர் அருள்சகோதரர் அல்போன்சுஸ். கவிஞரான இயேசு சபை குரு Gerard Manley Hopkins, தனது ஒரு கவிதைக்குக் கருப்பொருளாக, அருள்சகோதரர் அல்போன்சின் வாழ்வையே மையமாக வைத்து எழுதினார். அருள்சகோதரர் அல்போன்சுக்குப் படிப்பறிவு அதிகம் இல்லாவிட்டாலும் இவரது புனித வாழ்வைக் கண்ட பலர் இவரிடம் அறிவுரைகளும் ஆலோசனைகளும் பெற்றனர். அவ்வில்லத்துக்கு வருபவர்கள், வாயில்கதவிலுள்ள மணியை அடிக்கும்போதெல்லாம், “ஆண்டவரே, இதோ வருகிறேன்” என்று கூறி கதவைத் திறப்பாராம். இவ்வாறு ஒவ்வொரு மனிதரிலும் இறைசாயலைக் கண்டவர் இப்புனிதர். இந்தப் புனிதர் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

அருள்சகோதரர் அல்போன்சுஸ் 1617ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது 84வது வயதில் இறைபதம் அடைந்தார். 1825ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி திருத்தந்தை 12ம் சிங்கராயர் இவரை அருளாளராக உயர்த்தினார். அருள்சகோதரர் அல்போன்சுஸ் ரொட்ரிக்கெசும், அருள்தந்தை பீட்டர் கிளாவரும் ஒரேநாளில், அதாவது 1888ம் ஆண்டு சனவரி 15ம் தேதி திருத்தந்தை 13ம் சிங்கராயரால் புனிதர்களாக உயர்த்தப்பட்டார்கள்.

புனித அல்போன்சுஸ் ரொட்ரிக்கெசின் விழா அக்டோபர் 31ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. சோகங்கள், சவால்கள் இவற்றை ஆரம்பகால வாழ்வில் சந்தித்த இப்புனிதர், சாதாரண பணி மற்றும் செபம் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தவர். ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.







All the contents on this site are copyrighted ©.