2012-10-30 15:37:43

நைஜீரியாவில் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு காட்டுமிராண்டித்தனமானது, கடுனா பேராயர் கண்டனம்


அக்.30,2012. நைஜீரியாவில் ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த போது சக்தி மிக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்த செயல், கோழைத்தனமான, காட்டுமிராண்டித்தனமான மற்றும் பயங்கரவாதச் செயல் என்று சொல்லி, அதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கடுனா பேராயர் Matthew M. Ndagoso.
நைஜீரியாவின் வடபகுதியிலுள்ள கடுனா நகரின் கத்தோலிக்க ஆலயத்தில் இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் திருப்பலி நடந்து கொண்டிருந்தபோது, குண்டு நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் நேரடியாக ஆலயச் சுவரில் மோதியதில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து பிதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் Ndagoso, யாராவது இத்தகைய செயலைச் செய்வார்களா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, ஆயினும் செய்துள்ளார்கள் என்று கூறினார்.
மேலும், உள்ளூர் கிறிஸ்தவர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாமென அரசும் திருஅவையும் கேட்டுக் கொண்டன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு, இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் Boko Haram குழு வன்முறையில் இறங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,800 பேர் இறந்துள்ளனர் என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
நைஜீரியாவின் வடபகுதியில் பெரும்பாலும் முஸ்லீம்களும், தென்பகுதியில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் மற்றும் பூர்வீக மதத்தை வழிபடுகிறவர்களும் உள்ளனர். கடுனா உயர்மறைமாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 9.2 விழுக்காட்டினர் கத்தோலிக்கராக இருந்தனர்.







All the contents on this site are copyrighted ©.