2012-10-29 15:04:16

வாரம் ஓர் அலசல் – மரத்துப்போன மனிதம்


அக்.29,2012. 2010ம் ஆண்டு ஏப்ரல் 30, மாலை நேரம். உலகம், தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கானத் தயாரிப்பு வேலைகளில் சுறுசுறுப்பாய் சுழன்று கொண்டிருந்த கடைசி நேரம் அது. இந்தக் கடைசி நேரத்தில் "ஜிலானி” தோல் பதனிடும் தொழிற்சாலையும் கழிவுகளை அகற்றுவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் அது. ஏனெனில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலுள்ள இந்த ஜிலானி தொழிற்சாலையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு வாங்கியவர்கள், அதனை உரிமையாளரிடம், ஒப்படைக்க வேண்டிய இறுதி நாள் 2010ம் ஆண்டு ஏப்ரல் 30. எனவே அவர்கள் ஏறக்குறைய ஐந்து மாதங்களாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்த தொழிற்சாலைக் கழிவுநீரை முதலில் வெளியேற்றும் பணியைத் தொடங்கினர். வாணியம்பாடியில் மட்டுமே செயல்படும் 110 தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளைச் சுத்திகரித்து அகற்றும் பொறுப்பை வாணியம்பாடி கழிவுநீர்ச் சுத்திகரிப்பு தொழில் நிறுவனம் ஏற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர்களில் ஒருவர், தலித் தொழிலாளர்கள் ஐந்து பேரை இந்த ஆபத்தான பணிக்கு அமர்த்திக் கொண்டு வேலையைத் தொடங்கியிருக்கிறார். மனித உயிரின் முக்கியத்துவத்தையும், சட்ட விதிகளின் எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு அந்தக் கழிவுநீர்த் தொட்டியில் இறக்கிவிடப்பட்ட அந்த ஐந்து தொழிலாளிகளும் நச்சுவாயு தாக்கி உடனடியாக இறந்து விட்டனர். ஏனெனில் இப்படிச் சுத்தம் செய்யுமுன்னர் கழிவுநீர்த் தொட்டியை சிறிது நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் இப்படி நச்சுவாயு தாக்கி இறப்பது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள்.

2010ம் ஆண்டு மே மாதத்தில் தலித் முரசு என்ற இதழில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் நிலவரம் குறித்து வெளியான விரிவான கட்டுரையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. தோல் பதனிடும் தொழில், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரசு பாதுகாப்புடன் நடந்துவரும் ஒரு கொடிய தொழிலாகும். இத்தாலி, ஜெர்மனி, போர்த்துக்கல், போலந்து, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளிலும்கூட தோல் பதனிடும் தொழில் நடந்து வருகிறது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதிலும், மனிதர்களுக்கு நலவாழ்வுச் சீர்கேட்டை உருவாக்குவதிலும் இந்தியா, பங்களாதேசுக்குப் பிறகுதான் பிற நாட்டுத் தொழிற்சாலைகள் வருகின்றன. Human Rights Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த அக்டோபர் 4ம் தேதியன்று, பங்களாதேஷின் ஹசாரிபாக் பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் குறித்த 101 பக்க அறிக்கையை படங்களுடன் வெளியிட்டது. 2012ம் ஆண்டு சனவரிக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட நாள்களில் 134 பேரிடம் எடுத்த நேர்காணலை வைத்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த 134 பேரும், அந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்கள், தற்போது வேலை செய்பவர்கள், சேரிவாழ் மக்கள், அரசு-சாரா அமைப்பினர், நலவாழ்வுப் பணியாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள்.

இந்த ஹசாரிபாக் பகுதியில் பங்களாதேஷின் 90 முதல் 95 விழுக்காட்டுத் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. அதாவது இப்பகுதியில் 12 தொழிலாளர்கள் வேலை செய்யும் சிறிய தொழிற்சாலைகள் முதல், நூற்றுக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலை செய்யும் பெரிய தொழிற்சாலைகள்வரை ஏறக்குறைய 150 தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 21 ஆயிரம் கன மீட்டர் அளவில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றுகின்றன. சில சமயங்களில் அரசால் அனுமதிக்கப்பட்டதைவிட பல ஆயிரம் மடங்கு கழிவுகளை வெளியேற்றுகின்றன. விலங்குகளின் தோல்களைச் சுத்தம் செய்வதற்கு மிகவும் நச்சுத்தன்மையும், ஆபத்தும் மிகுந்த 250க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தொழிற்சாலைகளில் எட்டாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் பேர்வரை வேலை செய்கின்றனர். சில விழாக் காலங்களையொட்டி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு 15 ஆயிரம் பேர்வரைகூட வேலை செய்கின்றனர். பதனிடப்பட்ட தோல்கள் மற்றும் காலணிகள், கைப்பைகள், பெரிய பயண சூட்கேசுகள், இடுப்பு வார்கள் எனப் பல சாதாரண மற்றும் விலையுயர்ந்த தோல் பொருள்களின் ஏற்றுமதியால் பங்களாதேஷிக்கு 2011ம் ஆண்டு ஜூன் முதல் 2012ம் ஆண்டு ஜூலைவரை கிடைத்த வருமானம் 66 கோடியே 30 இலட்சம் டாலராகும். சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட ஏறத்தாழ எழுபது நாடுகளுக்கு தோல் மற்றும் தோல் சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்கின்றது பங்களாதேஷ். கடந்த பத்து ஆண்டுகளில் தோல் ஏற்றுமதிகளின் மதிப்பு, ஆண்டுக்கு 4 கோடியே பத்து இலட்சம் டாலர் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.

இந்தத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வேதியப் பொருள்களால், எரிச்சல், அரிப்பு போன்ற தோல் நோய்கள், பலவிதக் காய்ச்சல்கள், சுவாசம் சார்ந்த நோய்களால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், இவற்றால் காற்றும், நீரும், மண்ணும் மாசடைவதால் அப்பகுதிவாழ் மக்களும் வயிற்றுப்போக்கு மற்றும்பிற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். விலங்குகளின் தோல்களை வேதியப் பொருள்களில் அமுக்குதல், அவற்றைப் பிளேடுகளால் வெட்டுதல், ஆபத்தான இயந்திரங்களை இயக்குதல் போன்ற வேலைகளைச் சிறார் செய்கின்றனர். இவை போன்ற பல விபரங்களை வெளியிட்டுள்ள Human Rights Watch கழகம், அங்கு வேலை செய்யும் ஏறக்குறைய 11 வயது நிரம்பிய பத்துச் சிறாரிடம் நடத்திய பேட்டிகளையும் வெளியிட்டிருக்கிறது. இந்தச் சிறாரில் பலர் 12 மணி முதல் 14 மணி நேரம்வரை வேலை செய்கின்றனர். 17 வயதான Jahaj சொல்லியிருக்கிறார்....

நான் எனது 12வது வயதில் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது எனது தோலில் வெடிப்பு, அரிப்பு மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றால் துன்பப்படுகிறேன். பதனிடுவதற்காகத் தோல்களை அமுக்கும் தொட்டிகளில் வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் தோல்களைச் சுத்தம் செய்வதற்காக வேதியத் திரவங்கள் அதில் ஊற்றப்படும். அந்தத் தொட்டித் தண்ணீரும் அமிலம் கலந்ததாய் இருக்கும். அந்த ஆபத்தான சூழலில்தான் நான் சாப்பிட வேண்டும்.

வேலை செய்யும்போது பயன்படுத்தப்படும் கை உறைகள், முகமூடிகள், காலணிகள், மேலாடைகள் போன்றவை தரப்படுவதில்லை. அப்படிக் கொடுத்தாலும் அவை போதுமானதாக இல்லை, இன்னும், தோல் பதனிடும் இயந்திரங்களும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை எனப் பலர் Human Rights Watch அமைப்பிடம் கூறியிருக்கின்றனர். பங்களாதேஷிலுள்ள 176 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உட்பட அந்நாட்டிலுள்ள 903 தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை வெகுவாய் மாசுபடுத்தியுள்ள என, 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அந்நாட்டுச் சுற்றுச்சூழல் துறை கெஜெட்டில் வெளியிட்டது. டாக்காவின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஹசாரிபாக்கிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை Savar என்ற இடத்துக்கு மாற்றுமாறு உயர்நீதி மன்றம் சிலதடவைகள் உத்தரவு பிறப்பித்தும் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த 2012ம் ஆண்டு இறுதிக்குள் மாற்றிவிடுகிறோம் என உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இது உண்மையிலே நடக்குமா என்ற கேள்விக்குறியை எழுப்பியுள்ளன ஊடகங்கள். இந்தப் பகுதிகளில் மக்கள் குளிக்கும் தண்ணீர் கருப்பு நிறத்தில் இருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

40வயதான Shongiக்கு விரல்கள் இல்லை. தனக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்து விவரித்திருக்கிறார் Shongi...

நான் பதனிடுவதற்கானத் தோலை சூடான தகரத்தில் நுழைத்தேன். அந்தத் தோல் கொஞ்சம் சிக்கிக் கொண்டதால் எனது கையை உள்ளே நுழைத்து அதைச் சரிசெய்தேன். ஆனால் அந்தச் சூடான தகரம் தோலை உள்ளே இழுக்காமல், அது எனது கைமீது விழுந்துவிட்டது. அந்த இயந்திரம் சரியாக இயங்காததே இதற்குக் காரணம். சூடு தாங்க முடியாமல் கத்தினேன். எனது கரங்களிலிருந்து சதை பிய்ந்து விழத் தொடங்கியது

நான்கு பிள்ளைகளுக்குத் தாயான ஆஷோர் சொல்கிறார்... எங்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் தகரம் ஆறு மாதங்களில் வளைந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மாசு கேடு குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன் என்று.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கின்றது. தோல் பதனிடும் தொழிலில் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்கள், அணுக்கழிவுகளுக்கு இணையான நச்சுத்தன்மை கொண்டவை என்றுகூடச் சொல்கிறார்கள். ஹசாரிபாக் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீரில் விலங்குகளின் சதைகள், கந்தக அமிலம், துத்தநாகம், சாயம்பூசப் பயன்படும் பல வண்ணக் கனிமங்கள் போன்ற நூற்றுக்கணக்கான வேதியப் பொருள்கள் கலந்துள்ளன. இவை திறந்த சாக்கடைகளில் தேங்கி நின்று டாக்காவின் முக்கிய நதியில் கலக்கின்றன. எனவே ஹசாரிபாக் தோல் தொழிற்சாலைகள் ஆபத்தான வேதியப் பொருள்களை வெளியேற்றிச் சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கின்றன எனச் சொல்கிறார் இந்த அறிக்கையைத் தயாரித்த Human Rights Watchன் ஆய்வாளர் Richard Pearshouse. உலகில் விற்கப்படும் விலையுயர்ந்த தோல் பொருள்கள் பங்களாதேஷ் தலைநகரின் சேரிப் பகுதிகளில் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் இங்கு சிறார் உட்பட தொழிலாளர்கள் ஆபத்தான வேதியப் பொருள்களில் புழங்குகின்றனர், கடும் விபத்துக்களுக்கும் உட்படுகின்றனர். எனவே இப்பொருள்களை வாங்கும் நாடுகள், இங்கு வேலைசெய்வோருக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னர் அப்பொருள்களை வாங்க வேண்டும். மேலும், இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட அரசுகளை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் Pearshouse வலியுறுத்துகிறார்.

அன்பர்களே, அப்பாவிகளின் உயிரைப் பணயம் வைத்து இப்படிப் பணம் சேர்க்க வேண்டுமா?, ஆடம்பரமாக வாழ வேண்டுமா?, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் சிந்தப்பட்டுள்ள வியர்வை, கண்ணீர், இரத்தம் போன்றவற்றை நினைத்துப் பார்ப்போம். மனிதத் தன்மையற்று பணந்தின்னும் கழுகுகளாக தொழிற்சாலை முதலாளிகள் நடந்து கொள்ளும்வரை ஆபத்தான தொழில்களால் அப்பாவி மக்கள் வாழ்க்கை முழுவதும் உடல் உறுப்புக்களை இழந்து நோயினால் வாட வேண்டியிருக்கும். எனவே மரத்துப்போயிருக்கும் மனிதம் தூசு தட்டப்பட்டு உயிர் பெற வேண்டும்.

நமது செயல்களை நாம் தீர்மானிப்பது போலவே, நமது செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன. அன்புள்ளம் கொண்டவர்கள் மட்டுமே தாமாகவே முன்வந்து மற்றவர்களின் நலனில் அக்கறை காட்ட முடியும்.








All the contents on this site are copyrighted ©.