2012-10-29 15:46:26

மியான்மாரில் தொடர் வன்முறை, 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்வு


அக்.29,2012. மியான்மார் நாட்டில், ரகின் மாநிலத்தில் புத்தமதத்தினருக்கும் Rohingya சிறுபான்மை முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரு வராத்தில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இஞ்ஞாயிறன்று வெளியான செய்தியின்படி, 22,500 பேர் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.
பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்து மியான்மாரின் ரகின் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வாழும் ஏறக்குறைய எட்டு இலட்சம் முஸ்லீம்களில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
இந்த முஸ்லீம்கள், மியான்மாரில் குடியுரிமை கேட்டுப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகின் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் இவ்விரு மதத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரத்தில், இரு தரப்பிலும் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.