2012-10-29 15:29:58

திருத்தந்தை : குடியேற்றம், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்


அக்.29,2012. ஒவ்வொரு குடியேற்றதாரரும் மனிதர் என்பதால், அவர் கொண்டுள்ள அடிப்படையான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமைகள் ஒவ்வொருவராலும் அனைத்துச் சூழல்களிலும் மதிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார்.
இக்காரணத்துக்காகவே, “குடியேற்றதாரர்கள் : நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்” என்பது, 2013ம் ஆண்டின் உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு சனவரி 13ம் தேதி கடைப்பிடிக்கப்படும் 99வது உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, குடியேற்றதாரர் பலரின் இதயங்களில் நம்பிக்கையும் எதிர்நோக்கும் பிரிக்கமுடியாதவைகளாக இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
இந்தக் குடியேற்றதாரர்கள், தங்களது நிச்சயமற்ற வருங்காலத்தின் மீதான நம்பிக்கையின்மையைப் பின்னுக்குத் தள்ளி, கடவுள்மீது நம்பிக்கை வைத்து தங்களின் பயணத்தை மேற்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை இந்தக் குடியேற்றதாரர்களின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் அக்கறை காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு நாடும் இம்மக்கள் குறித்த கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உரிமையைக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அவ்வவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகியோர் இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் திருத்தந்தையின் இச்செய்தியை வெளியிட்டனர்.







All the contents on this site are copyrighted ©.