2012-10-28 13:16:57

திருத்தந்தை : இயேசுவை முழு மனித சமுதாயத்துக்கும் அறிவிப்பது இன்று திருஅவையின் மறைப்பணி


அக்.28,2012. அன்பு நேயர்களே, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் இம்மாதம் 7ம் தேதி தொடங்கியது. கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் என 262 மாமன்றத் தந்தையர்கள், இன்னும் வல்லுனர்கள், பார்வையாளர்கள் என அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர், பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் ஆகியோர் உட்பட 408 பேர் இதில் கலந்து கொண்டனர். கடந்த மூன்று வாரங்களாக, 23 பொது அமர்வுகளிலும், சிறு குழுக்களிலும் கருத்துகளைப் பகிர்ந்து கண்ட இவர்கள், 58 பரிந்துரைகளையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். இவைகளையெல்லாம் ஒன்றுசேர்த்து ஓர் அப்போஸ்தலிக்க ஏடாகவும் பின்னர் திருத்தந்தை வெளியிடுவார். இம்மாமன்றத்தின் இறுதியில், இம்மாமன்றத் தந்தையர், உலகக் கத்தோலிக்கருக்கென வெளியிட்ட செய்தியை ஒரு நம்பிக்கைச் செய்தியாகவே வழங்கியுள்ளனர். இயேசுவில் நம்பிக்கை வைப்பது என்பது, வருங்கால குறித்த நேர்மறை எண்ணங்களோடு வாழ்வதாகும். இக்காலத்தில் உலகாயுதப் போக்கும், கிறிஸ்தவத்தின்மீது காழ்ப்புணர்வும் அதிகரித்து வந்தாலும், திருஅவைப் பணியாளர்கள் சிலரின் பாவ வாழ்க்கைமுறைகள் இருக்கின்ற போதிலும், இவைகளுக்கு மத்தியில் கத்தோலிக்கர்கள் வருங்காலம் குறித்து நம்பிக்கையோடு இருக்க வேண்டும், ஏனெனில் கிறிஸ்துவின் மீட்பின் வாக்குறுதிகள் நமக்கு இருக்கின்றன. இந்த நமது நாள்களில் இறைவன் தமது வல்லமையின் கரங்களை நமக்குக் காட்டுவதற்காக நமது ஏழ்மையையும் அவர் பார்க்கத் தவற மாட்டார் என்பதிலும் கத்தோலிக்கர்கள் உறுதியாய் இருக்க வேண்டும். இந்த மாதிரியான நம்பிக்கை தரும் செய்தியுடன் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் பணிகளை நிறைவு செய்துள்ளனர் மாமன்றத் தந்தையர்.
இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை, மாமன்றத் தந்தையருடன் சேர்ந்து வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று இத்தந்தையருடன் சேர்ந்து வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி இதனை நிறைவு செய்தார். இஞ்ஞாயிறு காலை காற்றும் மழையுமாக இருந்த வானிலை நேரம் செல்லச் செல்ல நல்ல காலநிலையைத் தந்து கொண்டிருந்தது.
பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவால் பார்வை பெற்றதை விளக்கும் இஞ்ஞாயிறு மாற்கு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்து இத்திருப்பலியில் மறையுரை நிகழ்த்திய திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி, திருஅவையின் வாழ்வு முழுவதிலும் செய்யப்பட வேண்டும், இந்தப் பணி நாடுகளுக்கு மறைப்பணியாற்றுவதோடு தொடர்புடையது, இது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரையும் சார்ந்து உள்ளது ஆகிய மூன்று கருத்துக்களை வலியுறுத்தினார். இம்மறையுரையின் சுருக்கத்தை இப்போது கேட்போம்.
RealAudioMP3 பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெற்ற புதுமை புனித மாற்கு நற்செய்தியின் அமைப்பில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. ஜோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எருசலேம் புனித நகரத்துக்குச் செல்லும் ஏற்றமான பாதையில் இயேசு எரிக்கோவைக் கடந்து செல்கிறார். அவர் எரிக்கோவை விட்டு வெளியே சென்ற போது திமேயுவின் மகன் பர்த்திமேயு சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்று மாற்கு நற்செய்தியாளர் சொல்கிறார். புனித மாற்கு நற்செய்தி முழுவதுமே நம்பிக்கையின் பயணமாகும். இந்த நம்பிக்கை, இயேசுவின் பயிற்சிப் பள்ளியில் படிப்படியாக வளர்கிறது. இந்த நம்பிக்கையின் பயணத்தில் முதலில் சீடர்கள் வந்தாலும், மற்றவர்களும் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் பர்த்திமேயு. இவர் பார்வை பெற்றது, இயேசு தமது திருப்பாடுகளுக்கு முன்னர் ஆற்றிய கடைசி அற்புதமாகும். ஒருவர் மெய்மையை உண்மையிலேயே அறிய விரும்பினால், ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால் அவருக்கு நம்பிக்கையின் ஒளியாகிய இறைவனின் ஒளி தேவைப்படுகின்றது. அத்தகைய மனிதரையே பர்த்திமேயு குறித்து நிற்கிறார். பர்த்திமேயு பிறவியிலேயே பார்வை இழந்தவர் அல்ல. இவர் பார்வையை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பவரை, வாய்ப்பைப் பயன்படுத்தி இயேசுவை சந்தித்து எப்படிக் குணம் பெறுவது என்பதை அறிந்திருப்பவரைக் குறித்து நிற்கிறார். நம்பிக்கையுடன் வாழ்ந்த பர்த்திமேயு, கிறிஸ்துவைச் சந்திப்பதில் மீண்டும் பார்வை பெற்று, அத்துடன் தனது மாண்பின் முழுமையையும் அடைந்து இயேசுவோடு தனது பயணத்தைத் தொடர்கிறார். பர்த்திமேயு பற்றி வேறு எதுவும் சொல்லாத நற்செய்தியாளர், நம்பிக்கையின் ஒளியில் இயேசுவைப் பின்செல்லும் சீடத்துவ வாழ்வு என்ன என்பதை பர்த்திமேயுவில் நமக்குக் காட்டுகிறார். இந்த நற்செய்திப் பகுதி குறித்து புனித அகுஸ்தீன் விளக்கியுள்ளதையும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை மேலும் தொடர்ந்தார்.
பர்த்திமேயு, ஏதோ ஒரு வளமை நிலையிலிருந்து நொடித்துப் போனவர். பார்வையையும் இழந்து, பிச்சை எடுப்பதற்கும் அந்நிலை அவரை உட்படுத்தியிருக்கிறது. புனித அகுஸ்தீனாரின் இந்த விளக்கம் இன்று நம்மைச் சிந்திக்க அழைக்கிறது. நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வளங்களை நாமும் இழக்க முடியும். இங்கு பொருளாதார மற்றும் நிதி வளங்கள் பற்றித் தான் பேசவில்லை என்ற திருத்தந்தை, நீண்ட காலத்துக்கு முன்னர் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களைப் பர்த்திமேயு குறித்து நிற்கிறார் எனச் சொல்லலாம் என்றார். இப்பகுதிகளில் நம்பிக்கை ஒளி மங்கி மக்கள் இறைவனைவிட்டு விலகி இருக்கின்றனர். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் சொல்ல வேண்டுமானால் இம்மக்கள் தங்களது கம்பீரமான மாண்பிலிருந்து வீழ்ந்து, பாதுகாப்பான மற்றும் நல்ல வழியை இழந்து, தங்களுக்கேத் தெரியாமல் வாழ்வதன் பொருள் தேடும் பிச்சைக்காரர்களாக ஆகியுள்ளார்கள். புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி தேவைப்படும் பலரில் இவர்களும் உள்ளடங்குவர். இறைமகன் கிறிஸ்துவாகிய இயேசுவுடன் இவர்கள் புதிதாகச் சந்திப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கிறிஸ்துவால் இவர்களின் கண்களைத் திறந்து அவர்களுக்கானப் பாதையைப் போதிக்க முடியும். நம்பிக்கையின் ஒளி பலவீனமடைந்துள்ள மற்றும் இறைவனின் நெருப்பு அணைந்து போனதாக இருக்கும் இடங்களில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும் என்பதை இஞ்ஞாயிறு நற்செய்தி நமக்குக் கூறுகிறது.
இந்தப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருஅவையின் வாழ்வு முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டும். திருமுழுக்கு, உறுதிபூசுதல், திருநற்கருணை ஆகிய மூன்று திருவருட்சாதனத் தயாரிப்புக்களுக்குத் தகுந்த மறைக்கல்வி வழங்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத் திருவருட்சாதனமான ஒப்புரவு திருவருட்சாதனத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட வேண்டும். வாழ்வின் இறுதிப்பயண நோயில்பூசுதல் திருவருட்சாதனம் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும், இயேசு கிறிஸ்துவை இன்னும் அறியாதோருக்கு மீட்பின் செய்தியை அறிவிக்க வேண்டியது திருஅவையின் பணியாகும். ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய கண்டங்களில் பல பகுதிகளில் நற்செய்தி இன்னும் முதல்முறையாக அறிவிக்கப்படாமலே இருக்கின்றது என ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, திருஅவையில் புதிய மறைப்பணி ஆர்வம் ஏற்படுவதற்குத் தூய ஆவியிடம் செபிப்போம். அனைத்து மக்களும் இயேசு கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் அறிவதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். எனவே குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் அனைவரும் நற்செய்தியை அறிவிக்கும் கடமையைக் கொண்டுள்ளார்கள்.
RealAudioMP3 திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தங்களது திருமுழுக்குக்கு ஏற்ப வாழவில்லை. இத்தகைய மக்கள், எல்லாக் கண்டங்களிலும், குறிப்பாக, உலகாயுதப்போக்கு அதிகமாகவுள்ள நாடுகளில் இருப்பதாக ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, பராம்பரிய மற்றும் ஆண்டுக்கணக்காய்ச் செய்துவரும் மேய்ப்புப்பணி முறைகளையும் கடந்து புதிய முறைகளைக் கடைப்பிடிக்கும் வழிகளைத் திருஅவைத் தேடுகிறது. அன்பாக இருக்கும் இறைவனில் வேரூன்றிய உரையாடல் மற்றும் நட்புணர்வோடு கிறிஸ்துவின் உண்மையை உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு வழங்கும் புதிய மொழிகளை வளர்த்துக் கொள்ளும் வழிகளைத் திருஅவைத் தேடுகிறது. புறவினத்தார் முற்றம் என்ற பெயரில் ஏற்கனவே சில முக்கிய நகரங்களில் மறைப்பணி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பாளர்கள், இயேசு கிறிஸ்து வழியாக இறைவனால் குணமடைந்த அனுபவத்தைக் கொண்டவர்கள் போல் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆண்டவரே, எங்களில் இருக்கின்ற அனைத்துப் பார்வையற்றயற்ற தன்மையை விலக்கி உண்மையின் வழியில் செல்ல எமக்கு உதவும் என்று செபித்து நிறைவு செய்தார்.
இத்திருப்பலிக்குப் பின்னர் மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுற்றிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின்மீதான நமது நம்பிக்கையையும், மகிழ்ச்சி மற்றும் குணப்படுத்தலின் அவரின் நற்செய்தியை பரப்புவதற்கான நமது அர்ப்பணத்தையும் புதுப்பிப்போம் என்றார். கியூபா, ஹெய்ட்டி, ஜமெய்க்கா, RealAudioMP3 பஹாமாஸ் ஆகிய நாடுகளில் கடும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3 பயத்தை இறைநம்பிக்கை வழியாகவும், புறக்கணிப்பை அன்பு வழியாகவும், அவமதிப்பை எதிர்நோக்கு வழியாகவும் மேற்கொண்டு இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுகளாக வாழ்வோம்.








All the contents on this site are copyrighted ©.