திருத்தந்தை : வத்திக்கானின் கலை, உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது
அக்.26,2012. வத்திக்கானின் கலைப் பாரம்பரியம் உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது,
இது வழியாக, உலகின் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சார மனிதர்களிடம் திருத்தந்தையரால்
பேச முடிகின்றது எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். “கலையும் நம்பிக்கையும்
: வத்திக்கானில் அழகு” என்ற தலைப்பில் வத்திக்கான் அருங்காட்சியகம் பற்றிய போலந்து திரைப்படத்தை
இவ்வியாழன் மாலையில் பார்த்த பின்னர் இவ்வாறு கூறினார் திருத்தந்தை. வத்திக்கான் அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொருள்களிலும் வெளிப்படும் கலைக்கும் நம்பிக்கைக்கும்
இடையே இருக்கும் தொடர்பு குறித்து விளக்குவதற்கு எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இத்திரைப்படம்
இல்லாவிடினும், நம்பிக்கை ஆண்டின் தொடக்கத்தில் இத்திரைப்படம் வெளிவருவது சிறப்பான மதிப்பைப்
பெறுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை. உங்களுக்கு இறையாட்சியின் மறையுண்மைகள் விளக்கப்பட்டுள்ளன,
மற்றவர்கள் இதனை உவமைகள் மூலம் புரிந்து கொள்வார்கள் என, இயேசு தமது சீடர்களுக்குக் கூறியதை
இத்திரைப்படம் நினைவுகூர வைக்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.