2012-10-26 16:28:02

ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி : புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை


அக்.26,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை எனவும், கிறிஸ்தவர்கள், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு, அமைதியுடன்கூடிய துணிச்சலுடன் இவ்வுலகில் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமெனவும் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.
“இறைமக்களுக்குச் செய்தி” எனும் தலைப்பில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், உலகின் அனைத்து இறைமக்களுக்குமென 14 தலைப்புகளில் வழங்கிய செய்தி, இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குடும்பத்தினர், இளையோர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் பொறுப்புகள் இச்செய்தியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் திருஅவைகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் செய்தி வழங்கியுள்ள மாமன்றத் தந்தையர், உலகின் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி மக்களைக் கொண்டுள்ள ஆசியாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களின் இருப்பு பலனுள்ளதாக இருக்கின்றது எனப் பாராட்டியுள்ளனர்.
ஆசியக் கண்டத்தில் பல இடங்களில் திருஅவை நசுக்கப்பட்டாலும், அது தனது உறுதியான நம்பிக்கையால், நீதி, வாழ்வு, நல்லிணக்கத்தை அறிவிக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியின் விலைமதிப்பில்லாத பிரசன்னத்தை உணர்த்தி வருகிறது எனவும், ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் உலகின் மற்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களின் சகோதரத்துவ அன்பை உணருமாறும் அச்செய்தி ஊக்குவித்துள்ளது.
யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள, காலியான குடத்துடன் கிணற்றடியில் நின்ற சமாரியப் பெண் போன்று, இறைமக்கள் பல நேரங்களில் தடுமாற்றத்திலும் குழப்பத்திலும், சோர்வடைந்தும் இருக்கின்றனர், ஆயினும் அப்பெண்ணில் கடவுளுக்கான ஏக்கம் இருந்தது, அப்பெண் போன்று இயேசுவைச் சந்தித்தவர்கள் அமைதியாக இருக்க முடியாது, மாறாக அவரை அறிவித்து அவருக்குச் சான்றுகளாக வாழ வேண்டுமென அச்செய்தி வலியுறுத்துகிறது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு ஒவ்வொருவரின் சொந்த மனமாற்றமும் முக்கியம் என்பதையும் அச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது. இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.