2012-10-24 15:38:07

திருத்தந்தை : சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் உட்பட ஆறு புதிய கர்தினால்கள் அறிவிப்பு


RealAudioMP3 அக்.24,2012. கேரளாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவரான திருவனந்தபுரம் சீரோ-மலங்கரா ரீதி உயர்மறைமாவட்டப் பேராயர் Baselios Cleemis Thottunkal உட்பட ஆறு புதிய கர்தினால்களை நியமிப்பதாக இப்புதனன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் பேசிய திருத்தந்தை, வருகிற நவம்பர் 24ம் தேதி இடம்பெறும் நிகழ்வில் ஆறு பேர் கர்தினால்கள் அவையில் புதிதாக இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
புனித பேதுருவின் வழிவருபவர் தமது சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் திருப்பணியில் அவருக்கு உதவ வேண்டியவர்கள் கர்தினால்கள் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களுக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் James Michael Harvey, லெபனனின் மாரனைட் ரீதியின் அந்தியோக்கிய முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai, சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal, நைஜீரியாவின் அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan, கொலம்பியாவின் Bogotà பேராயர் Ruben Salazar Gomez, பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle ஆகிய ஆறு பேரைப் புதிய கர்தினால்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருஅவையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, இந்த ஆறு பேருடன் சேர்ந்து 122 ஆக உயர்ந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.