2012-10-23 16:16:20

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 141 பகுதி இரண்டு


RealAudioMP3 இதயத்தைப் புத்துணர்வாக வைத்துக்கொள்ள வேண்டுமா? நாள்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதயத்தின் வாழ்நாளை நீட்டிக்க வேண்டுமா? இவற்றையெல்லாம் உண்ணுங்கள், இவற்றையெல்லாம் உண்ணாதீர்கள் அல்லது அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மிகப்பெரிய பட்டியலையே இன்றைய மருத்துவ உலகம் தருகிறது. இதன் விளைவு கடற்கரை ஓரங்களிலும், பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும், விளையாட்டுத் திடல்களிலும் உடற்பயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இரத்தமும், சதையும் கொண்ட இதயத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று இதயத்தின் ஆன்மீக நலனைப் பாதுகாப்பதும் முக்கியமே. மாசுபடிந்த இரத்தத்தைச் சுத்தம் செய்யும் இதயத்தைத் தீய சிந்தனைகளிலிருந்து பாதுகாக்கவேண்டியதும் அவசியமே. அதுவே தனிமனித மற்றும் மனித சமுதாயத்தின் நலனுக்கு உத்தரவாதம். அன்பார்ந்தவர்களே இன்றைய விவிலியத்தேடலின் மையக்கருத்து இதயத்தூய்மை.

நாம் திருப்பாடல் 141ஐ சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் இப்பாடலின் 3வது சொற்றொடரை மட்டும் நாவடக்கம் என்ற மையக்கருத்தைக் கொண்டு சிந்தித்தோம். இன்று இப்பாடலின் அடுத்தச் சொற்றொடரை இதயத்தூய்மை என்ற தலைப்பிலே சிந்திப்போம் இதோ நான்காவது சொற்றொடர்:
என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்; தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்; தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்; அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும்.

மனித உடலின் செயல்பாடு பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளுமாறு சிறுவயதிலே ஒரு புத்தகம் வாசித்தேன். குறிப்பாக, மனிதர்களின் ஐம்புலன்களும், மூளையோடு இணைந்து எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கியிருந்தார் அந்நூலின் ஆசிரியர். எடுத்துக்காட்டாக, கண், ஒரு பொருளைப் பார்க்கிறது. தான் பார்த்ததை நரம்புகள் வழியாக மூளைக்கு அனுப்புகிறது. மூளை ஏற்கெனவே பதிவுசெய்த பொருட்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அப்பொருளின் பெயரைச் சொல்கிறது. அப்பொருள் தேவையெனில், அதை எடுக்குமாறு மூளை, கை நரம்புகளுக்குக் கட்டளையிடுகிறது. கைகள் அதை எடுக்கின்றன. இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிடுகின்றன. ஆனால் இச்செயலின் நடுவில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடக்கிறது. அப்பொருள் நல்லதா? கெட்டதா? தேவையா? தேவையில்லையா? என ஒரு பட்டிமன்றமே நடக்கிறது. இந்த பட்டிமன்றம் இதயத்தில் நடப்பதாக நம்புகிறோம். இவையெல்லாம் இதயத்தில்தான் நடக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என நாம் நன்கு அறிந்திருப்பினும், இவை இதயத்தில் நடப்பதாகவே நம்புகிறோம்.

குற்றவாளியைக் காட்டிலும், குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கே தண்டனை அதிகம் எனக்கேள்விப்பட்டிருக்கிறோம். தவறு செய்யும் கண், கைகள், கால்களைக் காட்டிலும் அதைச் செய்யத்தூண்டுகிற இதயமே தவறுக்குப் பொறுப்பு என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில், பெரும்பாலும் நமது செயல்கள், நமது சிந்தனைகளின் வெளிப்பாடே. நமது சிந்தனைகள்தான் செயல்களாக வெளிப்படுகின்றன. இதைத்தான் இயேசு கோடிட்டுக் காட்டுகின்றார்.
மாற்கு நற்செய்தி 7: 21-22.
ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.

உலகில் நடக்கின்ற எல்லாத் தீமைகளையும் களையவேண்டுமானால், இதயத்திலிருந்து வெளிவருபவை நல்லதாக இருக்கவேண்டும். அதற்கு நல்லதொரு சமூகச்சூழல் அவசியம். எனவேதான் தாவீது தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும் என்று செபிக்கிறார். எல்லா மனிதர்களுமே இவ்வுலகில் பிறக்கும்போது நல்லவர்கள்தான். ஆனால் அவர்கள் பிற்காலத்தில் நல்லவர்களாவதும், தீயவர்களாவதும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களைப் பொறுத்ததே. அவர்களது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் அவர்களது பண்புநலன்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.

கொல்கத்தா நகர் அன்னை தெரேசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியரில் ஒருவர் நடத்தை சரியில்லாதவர் என்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும். எனவே, அந்த நட்பைத் துண்டிக்கவேண்டும் என தெரேசாவின் தாய் முடிவெடுத்தார்.
ஒருநாள் அவர் தெரேசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியைக் கொடுத்தார். அப்பெட்டி நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட தெரேசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போன தெரேசாவை தாய் நிறுத்தினார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி தாய் கூறினார். அதன்படியே தெரேசாவும் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் நிரப்பினார். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார். தெரேசா புரியாமல் பார்த்தார். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார். 'ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?' என தெரேசா கேட்டார். 'எல்லாம் ஒரு காரணம்தான். இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டுபோய் ஓர் இடத்தில் வை. நான் சொல்லும்போது எடுத்து வா' என்றார் தாய். தெரேசா அப்படியே செய்தார்.

சில நாட்களுக்குப் பின் தாய் தெரேசாவை மறுபடியும் அழைத்தார். அந்த பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னர். பழக் கூடைகளை தெரேசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தார். அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாது அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த தெரேசா வருந்தினார். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவருக்கு அழுகையே வந்து விட்டது. தெரேசாவின் தாய் அவரை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்... “பார்த்தாயா? ஒரே ஒரு அழுகிய ஆப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான்” என்று சொன்னாராம்.

தீச்செயல் செய்யும் மனிதர்களிடமிருந்து நாம் ஒதுங்கிக் கொள்ளலாம். வெளியிலிருந்து வரும் தீய எண்ணங்களைக் கூட எளிதாக விலக்கலாம், அல்லது, சரிசெய்யலாம். ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் தீய எண்ணங்களை என்ன செய்வது?
நாம் விரும்புகிறோமோ, இல்லையோ நமது இதயத்திற்குத் தீயவைபால் ஓர் ஈர்ப்பு இருக்கிறது. இந்த ஈர்ப்புக்கு மறுப்புச் சொல்லி நேர்மறையாக நடப்பதுதான் நல்ல மனித சமுதாயத்தின் வெற்றியாகிறது. சிறு பிள்ளையைப் பார்த்து இதை செய்யாதே என்று சொன்னால் அதை செய்துவிட வேண்டும் என்ற ஆவல் அக்குழந்தைக்குள் வளரும். இதே ஆர்வம் பெரியவர்களையும் விடுவதில்லை. மனித சமுதாயத்தின் முதல் பாவமும் இதனால் வந்ததுதான் என விவிலியம் சொல்கிறது. விலக்கப்பட்ட கனியைச் சுவைத்ததன் விளைவுதானே எல்லாமே. தீமையின்பால் உள்ள ஈர்ப்புக்கு மறுப்புச் சொல்லவேண்டும். நன்மையை மட்டும் செய்யும் நல்லவர்களாக வாழவேண்டும் என எல்லாருமே விரும்புகிறார்கள். ஆனால் இந்தக் கனவை நனவாக்குவது வெகுசிலரே. இக்கனவைச் செயலாக்க முற்படும்போது பலரும் தடுமாறிவிடுகிறார்கள். இதைத்தான் தூய பவுல் இவ்வாறு சொல்கிறார்.
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 7: 15
ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.

தாவீது மன்னனும் இதற்கு விதிவிலக்கல்ல தீமையின்பால் தனக்குள்ள ஈர்ப்பை உணர்ந்த தாவீது இறைவனைத் தனக்குத் துணையாக அழைக்கிறார். இறைவா என் இதயத்தைக் கட்டுபடுத்தும் என்று மன்றாடுகிறார்.

அன்பார்ந்தவர்களே உணவு என்பது உறவின் அடையாளம். யாருடனாவது மனவருத்தமிருந்தால் நாம் அவர்கள் வீட்டில் உணவருந்துவதில்லை. உணவருந்தவில்லை என்றாலே உறவில் ஏதோ விரிசல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். அதேபோல, நாம் தெரியாத ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்வதுமில்லை; நமக்குத் தெரியாத ஒருவரை நம் வீட்டில் உணவருந்த அழைப்பதுமில்லை. பொதுவாக, நமது வீடுகளில் நடக்கும் உணவு பரிமாற்றம், வெறும் உணவு பரிமாற்றமாக மட்டும் இருப்பதில்லை... மாறாக அது உறவு பரிமாற்றமாகவும் இருக்கிறது. தீச்செயல் செய்யும் மனிதர்களோடு உணவருந்தச் சென்றால், அவர்களோடு உறவாடவேண்டும். உறவாடினால், அவர்களைப் போன்ற தீச்செயல்களில் ஈடுபடவேண்டும். எனவேதான் தாவீது இறைவா அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ண விடாதேயும் என்று செபிக்கிறார்.

தீச்செயல் செய்யும் மனிதரோடு தான் உண்ணும் விருந்தை, தாவீது சாதாரணமாக வெறும் விருந்து என்று குறிப்பிடவில்லை. மாறாக, இனிய விருந்து என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறார். தீயவை எப்பொழுதுமே இனிமையாகத்தான் தெரியும். குழந்தைகளுக்கு சாக்லேட்டினுடைய இனிமை மட்டும்தான் தெரியும். அவற்றை அதிகமாக உண்ணும்போது பற்களிலும், வயிற்றிலும் உருவாகும் பாதிப்புக்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதேபோல தீய நண்பர்களின், உறவும் இனிமையாகத்தான் தெரியும். குறிப்பாக, தீய பழக்கமுடைய நண்பர்களின் உறவு இளைஞர்களுக்கு இனிமையாகத்தான் தெரியும். ஆனால், பட்டுணர்ந்த பின்னரோ, அவர்களுடைய உறவே எல்லாவற்றுக்கும் காரணம் என புலம்புவார்கள். ஆனால் அப்பொழுது எல்லாமே அவர்களது கை மீறிப் போயிருக்கும்.
இறைவன் தன்னை தீமைகளில் விழச்செய்ய மாட்டார். தீச்செயல்களை நாடாமல், தீச்செயல்களை செய்யாமல் தன்னைக் காப்பார் என நம்பி மன்றாடுகிறார் தாவீது. தாவீதுடன் இணைந்து நாமும் மன்றாடுவோம்... நமது இதயம் நலமாக மாற, அது முதலில் தூயதாக மாறவேண்டும். இந்தத் தூய்மையைப் பேணிக் காக்க, நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தீய எண்ணங்கள், தீயச் சூழல்கள், தீச்செயல் செய்வோரின் நட்பு ஆகியவற்றை விட்டு விலகவேண்டும்... இம்முயற்சிகளில் இறைவன் நமக்குத் துணையிருக்க மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.