2012-10-23 16:18:23

இந்திய ஆயர் பேரவை மனித உரிமைகள் குறித்த நூலை வெளியிட்டுள்ளது


அக்.23,2012. “திருஅவையும் மனித உரிமைகளும்” என்ற நூலை, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் திருச்சியில் வெளியிட்டுள்ளார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையமும், தமிழக சமூகசேவை அமைப்பும் சேர்ந்து, இந்தியாவில் நீதி மற்றும் அமைதி விவகாரங்கள் குறித்த ஒருநாள் கலந்துரையாடலை திருச்சியில் நடத்தியது. அச்சமயத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
மனித உரிமைகள் குறித்த இந்நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆயர் யுவான் அம்புரோஸ், இறைமக்கள் மனித உரிமைகளை ஊக்குவித்து அவற்றுக்காகப் போராடுவதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு 2011ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்டபோது, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இந்த நூலை முதலில் வெளியிட்டது. இந்தத் திருப்பீட அவை இந்த நூலை இந்தியாவில் வெளியிடுவதற்கு அனுமதியும் வழங்கியது என ஆயர் யுவான் அம்புரோஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த நூல் கிடைப்பதற்கு வழிசெய்த, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்களுக்கு நன்றியும் சொன்னார் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ்.








All the contents on this site are copyrighted ©.