2012-10-23 16:12:31

13வது உலக ஆயர்கள் மாமன்றம் : 19வது பொது அமர்வு


அக்.23,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 19வது பொது அமர்வு திருத்தந்தையின் முன்னிலையில், இம்மாமன்றத் தலைவர் பிரதிநிதி கர்தினால் Laurent MONSENGWO PASINYAவின் தலைமையில் இச்செவ்வாய் காலை 9 மணிக்குத் தொடங்கியது.
258 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்ட இந்தப் பொது அமர்வில், முதலில் சிரியாவுக்குச் செல்லவிருக்கும் மாமன்றத் தந்தையர் பிரதிநிதி குழு குறித்து அறிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
சிரியாவில் இடம்பெறும் சண்டை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் காரணத்தினால் அந்நாட்டுக்குச் சென்று திருத்தந்தை மற்றும் மாமன்றத் தந்தையரின் ஒருமைப்பாட்டுணர்வை விரைவில் தெரிவிக்கவிருந்த இம்மாமன்றப் பிரதிநிதிகள் குழு, ஏற்கனவே திட்டமிட்டபடி செல்லாது, மாறாக, இம்மான்றம் முடிந்த பின்னர் செல்லும், இன்னும், இந்தப் பிரதிநிதிகள் குழுவிலும் மாற்றம் இருக்கும் என்று கர்தினால் பெர்த்தோனே அறிவித்தார்.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று காங்கோ குடியரசில் கடத்தப்பட்ட Anselme Wasukundi, Jean Ndulani, Edmond Kisughu ஆகிய மூன்று Assumptionist துறவியர் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அழைப்பு விடுத்த, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச், இக்கடத்தலால் வருந்தும் காங்கோ குடியரசின் ஆயர் பேரவைக்கு இம்மாமன்றத் தந்தையரின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.
பொது அமர்வுகளிலும் சிறிய குழுக்களிலும் மாமன்றத் தந்தையர் பரிந்துரைத்துள்ள 326 பரிந்துரைகளில் 57 பரிந்துரைகள் இச்செவ்வாய் காலை பொது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.