2012-10-22 16:11:56

வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த லூர்து அன்னையின் திருத்தலம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது


அக்.22,2012. வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த லூர்து அன்னையின் திருத்தலம் மீண்டும் திருப்பயணிகளுக்கு இத்திங்கள் திறந்துவிடப்படுகிறது என்றும், இத்திங்கள் மாலையில் மெழுகுதிரி ஏந்திய ஊர்வலம் வழக்கமான முறையில் நடைபெறும் என்றும் லூர்து மற்றும் Tarbes ஆயர் Nicolas Brouwet அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பெய்த பெருமழை காரணமாக, லூர்து அன்னைத் திருத்தலத்தையொட்டிச் செல்லும் Gave நதியின் கரைகள் இச்சனிக்கிழமை உடைந்த்தால், மரியன்னை கேபியைச் சுற்றி மூன்றடி அளவு வெள்ளம் நிறைந்தது.
இஞ்ஞாயிறன்று நீர்மட்டம் குறைந்தபின், தீயணைப்பு வீர்களும், திருத்தலத் தன்னார்வத் தொண்டர்களும் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் வெள்ளத்தின் பாதிப்புக்கள் விரைவில் நீக்கப்பட்டு, இத்திங்களன்று அன்னையின் கேபி திருப்பயணிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்று ஆயர் Brouwet கூறினார்.
நம்பிக்கை ஆண்டின் ஓர் அங்கமாக, அக்டோபர் 21 முதல் 27ம் தேதி முடிய அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் இரத்தம் அடங்கியத் திருப்பொருள் லூர்து அன்னையின் திருத்தலத்தில் திருப்பயணிகள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிகழ்ந்துள்ள வெள்ளப்பெருக்கு 25 ஆண்டுகளாக நிகழாத ஒரு சம்பவம் என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.