2012-10-22 14:35:30

வாரம் ஓர் அலசல் – நல்லதொரு சமுதாயம் அமைய....


அக்.22,2012 RealAudioMP3 . அந்த வீட்டுக்காரருக்கு நாக்கு ரொம்ப ரொம்ப நீளம். அவரிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. தனது மனைவி எப்படித்தான் சமைத்து வைத்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிக்காமல் சாப்பிடமாட்டார். ஒரு நாள், அவரது மனைவி ஆசையோடு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்திருந்தார். அன்று சாப்பிட அமர்ந்தவர் அதைப் பார்த்ததும் கத்த ஆரம்பித்துவிட்டார். உனக்கு அறிவில்லே.. ஏன், ஆம்லெட் போட்டே... ஆப்பாயில் போட்டுத் தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே... என்று வசைபாடினார். பாவம் அந்த வீட்டுக்கார அம்மா. அடுத்த நாள் அரைவேக்காடு போட்டு வைத்திருந்தார். அன்றும் சாப்பாட்டின்போது கத்தினார். ஏய்.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா.. ஏன் இப்படி முட்டையை அரைவேக்காடு போட்டு வச்சிருக்கா... ஆம்லெட்டா பொறிச்சி வைச்சிருக்கலாம்ல என்றார். பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண் யோசித்துப் பார்த்தார். சரி... நாளைக்கு ஒரு முட்டையை ஆம்லெட்டாகவும், இன்னொரு முட்டையை அரைவேக்காடாவும் வைப்போம் என்று முடிவு செய்தார். மறுநாள் அதேமாதிரியே செய்து வைத்தார். அப்பாடா.... இன்று கணவர் திட்டாமல் சாப்பிடுவார் என்று பெருமூச்சு விட்டார். ஆனால் அன்றும் சாப்பாட்டுத்தட்டைப் பார்த்தவுடனே அந்த மனிதர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். ஏய் முட்டாளே, ஆம்லெட் போடவேண்டிய முட்டையை அரைவேக்காடா வச்சிருக்க... அரைவேக்காடு போட வேண்டிய முட்டையில் ஆம்லெட் போட்டு வச்சிருக்கே.. பன்னாடை பன்னாடை என்று திட்டினார். இதற்குப் பின்னர் அந்தப் பெண் என்ன செய்திருப்பார், யூகித்துக் கொள்ளுங்கள் நேயர்களே. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா...

இப்படி எத்தனை வீடுகளில் கணவர்கள் குதர்க்கமாக நடந்து கொள்கிறார்கள், மனைவியிடம் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு இம்சைப் படுத்துவதையே பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் தவறு செய்தால் அதற்கும் தாய்தான் திட்டு வாங்க வேண்டியிருக்கின்றது. தினமும் குடித்துவிட்டு வீட்டுச் செலவுக்குப் பணமும் கொடுக்காமல், அதேசமயம் வயிறு நிறைய சாப்பாடு போட வேண்டுமென்று எதிர்பார்க்கும் கணவர்கள் இன்று எத்தனை பேர். சாப்பாடு போடவேண்டும் என்பதோடு நிறுத்திக் கொண்டாலும் பரவாயில்லை. பிள்ளைகள் முன்பாகவே தினமும் மனைவிக்கு அடி, உதை. இந்திய மாநிலங்களிலேயே தமிழகம்தான் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 40 விழுக்காட்டு மக்களுக்கு குடிப்பழக்கம் உள்ளது. மது விற்பனையால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்க் கிடைப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

எனக்கு இந்தக் கணவரே வேண்டாம், நான் எனது பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றி விடுவேன், குடித்துவிட்டு தினமும் இவரிடம் நான் படும் துன்பங்களை இனிமேலும் தாங்க முடியாது என விவாகரத்துக் கேட்கவும் இப்போது பெண்கள் துணிந்து விட்டார்கள். கணவர்களின் கொடுமைகள் தாங்க முடியாமல் சில பெண்கள் தங்கள் கணவர்களையே கொலைசெய்யவும் துணிந்து விடுகிறார்கள். இதற்குத் துப்பாக்கிகள் தேவைப்படுவதில்லை. அம்மிக்கல்லும் அரிவாள்மனையுமே போதுமானவைகளாக இருக்கின்றன. இல்லையெனில் தங்களது குழந்தைகளோடு தற்கொலை செய்துகொள்ளவும் தாய்மார் தயங்குவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளைவிட இவ்வாண்டில் இளம்சிறுமிகள் செய்யும் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிரித்து வருகிறது. கள்ளச்சாராய விற்பனை, திருட்டு, போதைப்பொருள் வியாபாரம், பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் மனித வியாபாரம் போன்ற குற்றங்களில்தான் பொதுவாக பெண்கள் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது கொலை போன்ற கடும் குற்றங்களைச் செய்யும் பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. இந்தியாவில் கொலைக் குற்றத்துக்காக 2007ம் ஆண்டில் 3,439 பெண்களும், 2009ம் ஆண்டில் 3,812 பெண்களும் கைது செய்யப்பட்டார்கள். 2007ம் ஆண்டில் 5.4 விழுக்காடாக அதிகரித்திருந்த இவ்வெண்ணிக்கை, 2009ம் ஆண்டில் 6 விழுக்காடாக உயர்ந்துள்ளது என, “இந்தியாவில் குற்றங்கள்” என்ற தலைப்பில் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.

“ஏழாவது திருமணம் செய்யச் சொன்னதால் தந்தையைக் கொலை செய்து ஏரியில் வீசிய மகள்” என்ற ஒரு செய்தி, தடித்த எழுத்துக்களில் கடந்த சனிக்கிழமையன்று வெளியானது. இந்தியாவில் பங்களூருவில் வாழ்ந்து வரும் பால்ராஜ் என்பவர் மூன்று பெண்களைத் திருமணம் செய்தவர். இவருக்கு 15க்கும் மேற்பட்ட மகன், மகள்கள் உள்ளனர். இவர்களில் ஆஷா ராணி என்ற மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்த பால்ராஜ், ஆஷா ராணிக்குத் திருமணம் செய்து வைத்து தனது மருமகனிடம் பணத்தைக் கரந்து வந்தார். அந்த மருமகனிடம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டபோது வேண்டுமென்றே சண்டை போட்டு அவரை நீக்கி விட்டு, பின் ஆஷாவுக்கு வேறொரு திருமணம் செய்து வைத்து அந்த மாப்பிள்ளையிடமும் பணம் பறித்தார். இப்படி ஐந்து ஆண்களை ஆஷாவுக்குத் திருமணம் செய்து வைத்து பணம் பறித்துவிட்டு அவர்களை கழட்டிவிட்டார். தற்போது ஆறாவது கணவரையும் பால்ராஜ் கழற்றிவிட நினைத்ததால், ஆஷா தனது தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை தனது சகோதரர் ஒருவருடன் ஏரியில் வீசியிருக்கிறார்.

சிறைகளில் பெண் கைதிகளை, அதிலும், கொலைக் குற்றவாளிப் பெண் கைதிளைச் சந்தித்துப் பேசும்போது பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பெண் கைதிக்கு முப்பது வயது இருக்கும். அவரைச் சந்திக்கச் சென்ற ஓர் அருள்சகோதரியிடம் அவர் தனது பிள்ளைகள் படிப்பதற்கு உதவி கேட்டார். அந்தப் பெண்ணைப் பார்க்கும் யாருமே அவரைக் கைதி என்று எடைபோட முடியாது. அந்த அளவுக்கு அமைதியானவராகத் தெரிந்தார். அந்தக் கைதியின் கதையை அறிய வந்தபோது நமக்கே பரிதாபமாக இருந்தது. அவர் தனது கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார். சந்தேகப் பேர்வழியான அவரது கணவர் அந்த நாள் மாலையில் சூடான இரும்புக் கம்பியால் அந்தப் பெண்ணை எரிக்கத் தொடங்கியிருக்கிறார். வேதனையைத் தாங்க முடியாத அந்தப் பெண் அந்த மனிதரைக் கீழே தள்ளிவிட்டிருக்கிறார். கணவர் எழுந்து தன்னைச் சித்ரவதை செய்து கொலை செய்வதற்கு முன்னர் அந்தப் பெண் அவரைக் கொலை செய்திருக்கிறார். தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கணவரைக் கொலை செய்தேன் என விவரித்தார். இப்படிச் சொன்னதுபோது அவரது குரலில் ஆவேசமும் வேதனையும் கலந்த வார்த்தைகள் வெடித்துச் சிதறின.

மனைவிகளால் துன்புறுத்தப்படும் கணவர்கள் இல்லையா என்று, நேயர்களே நீங்கள் கேட்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக் காதலனோடு மனைவி சென்றுவிட்டார் என்று, இஞ்ஞாயிறன்றுகூட ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் மனைவிகளால் துன்பப்படும் கணவர்களைவிட, கணவர்களால் துன்புறுத்தப்படும் மனைவிகளே அதிகம் என்பதுதான் உண்மை. மத்திய ஆசியாவிலுள்ள தஜிகிஸ்தான் குடியரசில் வேலைதேடி வெளிநாடு செல்லும் ஆண்கள் வெளிநாட்டில் இருந்தபடியே தமது மனைவிகளை விவாகரத்து செய்வதாலும், குடும்பத்தைக் கைவிட்டு விடுவதாலும் அந்நாட்டில் பெண்கள் கடும் வறுமையில் வாடுகின்றனர் என்று ஒரு செய்தி இம்மாதத்தில் வெளியானது. இந்த ஏழை நாட்டில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்நாட்டின் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் பிழைப்பு தேடி இரஷ்யா சென்றுவிட்டனர். இவர்கள் அங்கிருந்து நாட்டுக்கு அனுப்பும் பணம்தான் இந்த நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காடாக இருக்கிறது. அதேநேரம், இவ்வாண்டு, தஜிகிஸ்தானில் நடந்துள்ள விவாகரத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டிலிருந்து 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. தொலைபேசி மூலம் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வதுகூட இங்கு இடம்பெறுகின்றது. ஆண்கள் தங்களுடைய மனைவியரிடம் நேருக்கு நேர் நின்றோ, தொலைபேசியில் அழைத்தோ, அல்லது ஒரு தொலைபேசி குறுந்தகவலை அனுப்பியோ தலாக் என்று மூன்று முறைசொல்வதன் மூலமாகவே அவரை விவாகரத்து செய்துவிட முடியும் என்ற ஒரு நிலையிருக்கும் ஒரு சில இசுலாமிய நாடுகளில் தஜிகிஸ்தானும் ஒன்று.

இரானிலுள்ள 36 பல்கலைக்கழகங்களில் 77 பாடங்கள் ஒரே பாலினத்துக்கு மட்டும் உரியன, இது அடுத்த ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என அந்நாடு அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை ஐ.நா. உட்பட பல மனித உரிமை ஆர்வலர்களைக் கொதித்தெழச் செய்திருக்கிறது. மாணவ மாணவியர் விகிதத்தில் உலகில் அதிகமான மாணவியரைக் கொண்டுள்ள நாடு இரான் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது. மூன்றுக்கு இரண்டு பேர் வீதம் மாணவியர் உள்ளனர். இப்படியிருந்தும், அணுசக்தி இயற்பியல், கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களை மாணவியர் கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அன்பர்களே, உலகில் நாடுகளின் அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும், இன்றும் பெண்கள் பலவாறு ஒடுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப்படுகிறார்கள், நசுக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் சூழ்நிலைக் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள். இவ்வுலகில் பிறக்கும்போதே யாரும் குற்றவாளியாகப் பிறப்பதில்லை. குற்றங்கள் தன்னிலே கொடுமையான செயல்தான். ஆயினும், பெண் குற்றவாளிக்குத் தேவையானது தண்டனையல்ல, மாறாக அவர்கள் அக்குற்றங்களைச் செய்வதற்குக் காரணமான சமூக அநீதிகளையும் சமத்துவமின்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் களைவதற்கு அரசுகளின் நடவடிக்கையே தேவை. ஏனெனில் இந்தப் பெண் குற்றவாளிகள், சமுதாயத்தின் அநீத மற்றும் சமத்துவமற்ற அமைப்பு முறைகளால் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். இது, அவர்கள் மனம், உடல், பாலியல், பொருளாதாரம் மற்றும் சமூக அளவில் எதிர்கொள்ளும் ஒரு கடும் விவகாரம். பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சமூகப் பிரச்சனைகள் தீர்க்கப்படாதவரை இந்த மனித சமுதாயம் ஒரு நோயாளிச் சமுதாயமாகவே இருக்கும். நலமான சமுதாயம் அமைவதற்கு நலமான மனிதர்கள் தேவை. நலமான மனிதர்களை உருவாக்குவதில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருக்கின்றது.

ஆஸ்ட்ரியாவின் St. Egyden am Steinfeld wielding என்ற ஊரில் Hertha Wallecker என்ற 82 வயது மூதாட்டி வங்கிக் கொள்ளையர் ஒருவரை, "சோம்பேறிப் பேய்" என்று சொல்லி மடக்கிப் பிடித்த செய்தி கடந்த புதனன்று பல ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது. அந்தக் கொள்ளையர் கைத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டை காட்டி மிரட்டியதால், வங்கியில் இருந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் ஆடாமல் அசையாமல் நின்றனர். ஆனால் இந்த மூதாட்டி துணிச்சலுடன், கொள்ளையர் அருகே சென்று அவரது முகமூடியை கிழித்தெறிந்து வங்கிக் கொள்ளையைத் தடுத்திருக்கிறார்.

நலமான சமுதாயம் அமைப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் பெண்களுக்குத் தேவை இத்தகைய துணிச்சலே. இத்தகைய மன உறுதியே







All the contents on this site are copyrighted ©.