2012-10-20 15:34:43

ஏழு அருளாளர்களைப் புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை


அக்.20,2012. பல்வேறு நாடுகளில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஏழு அருளாளர்களை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த அருளாளர்களில் நான்கு பேர் பெண்கள் மற்றும் மூன்று பேர் ஆண்கள். இவர்களில், 1896ம் ஆண்டில் மடகாஸ்கரில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டு இயேசு சபை அருள்தந்தை Jacques Berthieu மற்றும் Guam தீவில் 1672ம் ஆண்டில் கொல்லப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டு 17 வயது வேதியர் Peter Calungsod ம் மறைசாட்சிகள்.
இன்னும் இரண்டு அருளாளர்கள் கல்விக்கென தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். 1911ம் ஆண்டில் இறந்த இஸ்பெயின் நாட்டு அன்னை Carmen Sallés, அமலமரி மறைபோதகச் சபையை ஆரம்பித்தவர். இவர் பெண்களுக்குக் கல்வி அளிப்பதற்குத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். 1913ம் ஆண்டில் இறந்த இத்தாலியரான அருள்பணி Giovanni Piamarta Battista ஓரங்கட்டப்பட்ட இளைஞர்களுக்குக் கல்வி வழங்குவதில் அக்கறை எடுத்தவர்.
இன்னும், அமெரிக்கப் பழங்குடிப் பெண்ணான Kateri Tekakwitha, ஹவாய்த் தீவில் தொழுநோயாளர் மத்தியில் பணிசெய்த அன்னை Marianne Cope, தனது வாழ்வில் அதிகக் காலம் நோயால் துன்புற்ற ஜெர்மனியின் Anna Schäffer ஆகிய மூன்று அருளாளர்களும் தங்களது துன்பங்களை கடவுளுக்காகத் தாங்கிக் கொண்டவர்கள்.
உலக மறைபரப்பு தினமான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலியைத் தொடங்குவதற்கு முன்னர் இவர்கள் எழுவரையும் புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.