2012-10-20 15:28:26

இராட்சிங்கர் இறையியல் விருதை வழங்கினார் திருத்தந்தை


அக்.20,2012. திருஅவைத் தந்தையர்யியலில் புகழ்பெற்ற அமெரிக்க இயேசு சபை அருள்தந்தை Brian E. Daley, ப்ரெஞ்சு மெய்யியல் மற்றும் கலாச்சார வரலாற்றுப் பேராசிரியர் Rémi Brague ஆகிய இருவருக்கும் இவ்வாண்டுக்கான “இராட்சிங்கர் இறையியல்” விருதை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏறக்குறைய 400 பேருக்கு உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்தில் திருஅவைக்குத் தேவையான இரண்டு முக்கிய கூறுகளில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர் என்று பாராட்டினார்.
உண்மையான கத்தோலிக்க இறையியல் சார்ந்த முயற்சிகளில் இறைவன் பற்றிய அறிவுசார்ந்த கோட்பாட்டுக்கும், வாழ்வில் ஏற்படும் இறையனுபவத்துக்கும் இடையேயுள்ள ஆழமான மற்றும் அவசியமான தொடர்பு குறித்துப் பேசினார் திருத்தந்தை.
இறையியலுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே தொடர்பை உருவாக்குவதற்கு அயராது உழைப்பவர்க்கென வழங்கப்படும் “நொபெல் இறையியல் விருது” என அழைக்கப்படும் இவ்விருதை, “ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட்” என்ற வத்திக்கான் நிறுவனம் வழங்கி வருகிறது.
பிரான்சில் 1947ம் ஆண்டு பிறந்த Rémi Brague , நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாவார். இவர் ஒரு மெய்யியல் பேராசிரியர் மற்றும் இயேசு சபை அருள்தந்தை Brian E. Daley ஓர் இறையியல் பேராசிரியர் ஆவார்.
நூல்களை வெளியிடுவதிலும் அறிவியல் ஆய்வுகளிலும் சிறப்பாகப் பங்காற்றி வரும் வல்லுனர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
87 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசைக் கொண்ட இவ்விருது 2011ம் ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.