2012-10-19 15:39:11

நைஜீரியப் பேராயர் : வன்முறைகள், கிறிஸ்தவமும் இசுலாமும் போதிக்கும் உண்மையான விழுமியங்களுக்கு எதிரானவை


அக்.19,2012. நைஜீரிய சமுதாயம் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ வேண்டுமெனில் கிறிஸ்தவமும் இசுலாமும் போதிக்கும் உண்மையான விழுமியங்களுக்கு அந்நாடு திரும்பிவர வேண்டுமென்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama கூறினார்.
“சமயச் சகிப்புத்தன்மையும், அமைதியான ஒன்றிணைந்த வாழ்வும்” என்ற தலைப்பில் அந்நாட்டு வானொலி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய ஜோஸ் பேராயர் Kaigama, ஒரே கடவுள் கொள்கையுடைய யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களும் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை பற்றியே பேசுகின்றன என்று கூறினார்.
நைஜீரியாவின் பல பகுதிகள் வன்முறைகளால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ளவேளை, கிறிஸ்தவருக்கும் இசுலாமியருக்கும் இடையே தோழமையுணர்வு தேவை என்பதை வலியுறுத்தினார் பேராயர் Kaigama.
மேலும், 2012ம் ஆண்டின் Pax Christi அனைத்துலக அமைதி விருது, நைஜீரியாவின் அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekanக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் பல்வேறு மதத்தினர் மத்தியில் உரையாடல் வழியாகப் புரிந்து கொள்ளுதலை ஊக்குவித்து வரும் பேராயர் Onaiyekanனின் பணியைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pax Christi அமைப்பின் பன்னாட்டு அதிகாரிகள், அக்டோபர் 31ம் தேதி Brusselsல் இவ்விருதை வழங்குவார்கள்.







All the contents on this site are copyrighted ©.