2012-10-19 15:35:47

கர்தினால் வெர்சால்தி : நிதி நிர்வாகத்தில் தவறுகள் செய்வோர் முதலில் சகோதரத்துவ முறையில் திருத்தப்பட வேண்டும்


அக்.19,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இவ்வியாழனன்று சிறிய குழுக்களில் கலந்துரையாடல்களை நடத்தியவேளை, பொது அமர்வுகளில் உரை நிகழ்த்தாத 18 மாமன்றத் தந்தையர் தங்களது உரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
மியான்மார், லைபீரியா, சாட், கிழக்குத் தைமூர், சூடான், எரிட்ரியா, மடகாஸ்கர், கொமோரேத் தீவு, டான்சானியா, அர்ஜென்டினா, பிரிட்டன், ஹங்கேரி, நைஜீரியா, லெசோத்தோ, பாப்புவா நியு கினி, வத்திக்கான் எனப் பல நாடுகளைச் சேர்ந்த 18 மாமன்றத் தந்தையர் தங்களது உரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பலர், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி மற்றும் இப்பணியைச் செய்வதற்கானத் தலத்திருஅவைகளின் நிலைகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உரை சமர்ப்பித்துள்ளவர்களில் ஒருவரான திருப்பீடத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான அலுவலகத் தலைவர் கர்தினால் Giuseppe Versaldi, நிதி நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகள் மற்றும் அவை திருத்தப்படவேண்டிய முறைகள் பற்றி விளக்கியுள்ளார்.
திருஅவையின் சொத்துக்களை நிர்வாகம் செய்வோர் தவறு செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளன, அந்நிர்வாகிகளில் தவறுகள் வெளிப்படும்போது முதலில் சகோதரத்துவ முறையில் அவர்களுக்குத் திருத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும், அப்படிக் கொடுத்தும் மனமாற்றம் வெளிப்படாதபோது இந்தத் தவறுகளைத் திருத்துவதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அழைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கர்தினால் வெர்சால்தி.








All the contents on this site are copyrighted ©.