2012-10-18 15:24:59

ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் பெர்த்தோனே : திருப்பீடத் தூதர்கள் உரோமில் கலந்துரையாடல் நடத்துவதற்குத் திருத்தந்தை அழைப்பு


அக்.18,2012. இம்மாதம் 11ம் தேதி ஆரம்பித்திருக்கும் நம்பிக்கை ஆண்டு குறித்து உலகின் அனைத்துத் திருப்பீடத் தூதர்களுடன் ஓர் ஆழமான கலந்துரையாடல் நடத்துவதற்கென அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோமைக்கு அழைத்துள்ளார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் இப்புதனன்று இதனை அறிவித்த கர்தினால் பெர்த்தோனே, உலகின் அனைத்துத் திருப்பீடத் தூதர்கள், திருத்தந்தையின் பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர்கள் ஆகிய அனைவரும் திருத்தந்தையுடன் கலந்துரையாடல் நடத்துவார்கள் என்று கூறினார்.
நம்பிக்கை ஆண்டில் மறைப்பணிகளை ஆழப்படுத்தும் நோக்கத்தில் பாப்பிறையின் இந்தப் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களை ஒருவர் ஒருவருடன் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் கர்தினால் பெர்த்தோனே கூறினார்.
இக்கலந்துரையாடல் கூட்டம் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இவ்வியாழனன்று சிறிய குழுக்களில் கலந்துரையாடல்களை நடத்தினர்.
உலகில் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் திருப்பீடத் தூதர்கள் பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.