2012-10-17 15:41:37

வறுமையால் துன்புறும் மக்களின் மாண்பும் உரிமைகளும் காக்கப்படுவதற்குத் தொடர்ந்து உழைக்குமாறு திருத்தந்தை வலியுறுத்தல்


அக்.17,2012. வறுமையை ஒழிப்பதற்கு மனித சமுதாயம் ஓய்வின்றி போராட வேண்டிய அதேவேளை, வறுமையால் துன்புறும் மக்களின் மாண்பும் உரிமைகளும் காக்கப்படுவதற்குத் தொடர்ந்து உழைக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதனன்று அனைத்துலக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இப்புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட, ATD என்ற “நான்காம் உலகில் அனைவருக்கும் மாண்பு” என்ற அனைத்துலக இயக்கத்தின் இத்தாலிய உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை, வறுமை ஒழிப்புக்கு இவ்வியக்கத்தினர் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகக் கூறினார்.
“வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: தேவையை பூர்த்தி செய்து அமைதியை உருவாக்குதல்” என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று அனைத்துலக வறுமை ஒழிப்பு தினம் ஐ.நா.வால் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், இவ்வுலக தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், உலகில் இன்றும் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், உணவு, கல்வி, நலவாழ்வு ஆகியவற்றைப் பெறுவதற்கான அடிப்படை உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
இன்னும், இந்நாளையொட்டி ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய உலக வங்கியின் உதவித் தலைவர் Rachel Kyte, உலகில் கடந்த 20 ஆண்டுகளில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றபோதிலும், இன்னும் உலகில் 130 கோடிப் பேருக்கு மின்சார வசதியும், 260 கோடிப் பேருக்கு நலவாழ்வு வசதியும், 90 கோடிப் பேருக்குச் சுத்த்மான குடிநீர் வசதியும் கிடையாது, ஏறத்தாழ 80 கோடிப் பேர் இன்றும் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர் என்று கூறினார். வறுமையற்ற உலகத்தை உருவாக்குவதே உலக வங்கியின் இலக்கு என்றும் Kyte கூறினார்.







All the contents on this site are copyrighted ©.