2012-10-16 16:24:47

விவிலியத் தேடல் - திருப்பாடல் 141 - பகுதி 1


அக்.16,2012 RealAudioMP3 அன்பார்ந்தவர்களே! இதுவரை நாம் சிந்தித்த சில திருப்பாடல்களில், “ஆண்டவரே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும், எதிரிகள் வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்” என்று பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு தாவீது மன்னன் மன்றாடியதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 141, பிற பாடல்களிலிருந்து சற்று மாறுபட்டு உள்ளதைப் பார்க்கிறோம். ஏனெனில், “என் நாவுக்கு காவலாக இரும், என் இதயத்தையும் தூய்மையாகப் பேணிக்காத்தருளும்” என தாவீது மன்னன் மன்றாடுகிறார். சுய ஆய்வு செய்து, தன்னிடமிருந்த குறைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்ய இறைவனின் உதவியை நாடுகின்றார். இறைவன் முன்னிலையிலும், மனிதர்கள் முன்னிலையிலும் தூய்மையானவராக வாழ இவர் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இது ஒவ்வொரு தனிமனிதரும் எடுக்க வேண்டிய முயற்சி என்று சொன்னால் அது மிகையாகாது. மனித வாழ்வு, தூய்மையாக அமைய ஒவ்வொரு தனிமனிதரும் செய்ய வேண்டியது என இருபெரும் காரியங்களை ஆசிரியர் இப்பாடலில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. அவை: நாவடக்கம் மற்றும் இதயத்தூய்மை. இவ்விரண்டில் இன்று நாவடக்கம் பற்றி மட்டும் சிந்திப்போம். அதற்காக இப்பாடலின் மூன்றாவது சொற்றொடரை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
இச்சொற்றொடரைக் கேட்டதும் எனக்கு ஓர் ஒப்புமை நினைவுக்கு வருகிறது. “என் மகன் அடங்குவதேயில்லை, சொல்பேச்சுக் கேட்பதுமில்லை, சரியாகப் படிப்பதும் இல்லை. இனிமேலும் வீட்டில் இருந்தால், அவன் கெட்டு குட்டிச் சுவராகி விடுவான். எனவேதான் அவனை விடுதியில் சேர்ப்பதற்கு முடிவு செய்து இங்கு அழைத்து வந்தேன். இனி நீங்கள்தான் அவனைத் திருத்தவேண்டும். இந்தாருங்கள், உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்” எனச் சொல்லி விடுதிக்காப்பாளரிடம் தன் மகனை ஒப்படைக்கிறார் ஒரு தாய். தான் பெற்ற பிள்ளையைத் தாய்தான் சரியாக வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, பிறரிடம் ஒப்படைத்து சரியாக வளர்க்கச் சொல்வது எவ்வளவு வேடிக்கையோ அதேபோல, தான் கட்டுப்படுத்தவேண்டிய நாவை “இறைவா நீரே என் நாவுக்குக் காவலாக இரும்” என தாவீது மன்னன் மன்றாடுவதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. வேடிக்கை என்று சொன்னாலும்கூட தாவீது மன்னன் உயர்ந்து நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் தாவீது மன்னன் தன் நாவால் ஏற்பட்ட தீமைகளையும், விளைவுகளையும் நன்கு அறிந்து, உணர்ந்திருக்கிறார். தன் நாவைக் கட்டுப்படுத்த முயற்சியும் செய்திருக்கிறார். அம்முயற்சியில் தோற்றுப்போய், எவ்வாறேனும் நாவைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று முடிவும் செய்திருக்கிறார். இத்ததைய முதல் நிலையைக் கடந்து, இறைவா நீரே காவலாக இரும் என்று மன்றாடும் இரண்டாம் நிலைக்கு வந்திருக்கிறார். ஆனால், இன்றைய உலகில் பெரும்பாலானோர் முதல் நிலையிலேயே நின்றுவிடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நாவால் ஏற்படும் தீமைகளை உணர்வதுமில்லை. விளைவுகளை நினைத்து, வருந்தி, நாவைக் கட்டுப்படுத்த முயல்வதுமில்லை.
அன்பார்ந்தவர்களே! ஒரு மனிதருடைய அன்பு, பாசம், நல்லமனது பிறருக்கு எவ்வாறு தெரியும்? அவருடைய பேச்சு மற்றும் செயல் வழியாகத்தான். மனிதருடைய மனதை முதலில் வெளிப்படுத்துவது பேச்சுதான். ஆயிரம் அன்பு, பாசம் இருந்தாலும் அவை பேச்சில் வெளிப்படவேண்டும். அப்போதுதான் அது பிறருக்குத் தெரியும். எனவே பேச்சு மிக முக்கியமானது. கவனித்துப் பேசவேண்டும். நல்லமனம் கொண்ட மனிதரையும்கூட பிறர் கண்ணுக்கு மோசமானவராகச் சித்திரிப்பது நம்முடைய நாவே. தவறான சில வார்த்தைகள் நல்லமனம் கொண்ட மனிதரையும் மோசமானவராக காட்டும் என்பதற்கு நம் அன்றாட வாழ்வில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் நிரம்பிக் கிடக்கின்றன.
இன்றைய உலகில், நிறையப் பேருக்கு தன் உடன் வாழ்பவர்களை (கணவன், மனைவி, தந்தை, தாய், பிள்ளைகள், உடன்பிறந்தவர்களை) பிடிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், அவர்களது பேச்சுதான். குடும்பத்திலுள்ளவர்கள் பாசமில்லாதவர்கள் அல்ல. நிறையவே பாசமுடையவர்கள்தான். ஆனால், சிறிய தவறுகள் நிகழும்போது கண்டிக்கவேண்டும். வருத்தத்தைத் தெரிவிக்கவேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அது பிறருடைய வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். நம்முடைய கோபத்தைக் கொட்டித்தீர்த்துக் கொள்வதாக இருக்கக்கூடாது. கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டு, கோபம் தணிந்தவுடன் நாம் திட்டியது தவறு என உணர்ந்து மன்னிப்பு கேட்டாலும், திட்டிய, கொட்டிய வார்த்தைகளைத் திரும்ப அள்ளவும் முடியாது. புண்படுத்திய மனதை எம்மருந்து இட்டு ஆற்றவும் முடியாது.
இதைத்தான் வள்ளுவர்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
என்று சொல்கிறார். நெருப்பு சுட்ட காயம், காலம் செல்லச் செல்ல மறைந்து விடும். ஆனால், ஒருவரைத் தாக்கிப் பேசும்போது உதிரும் வார்த்தைகள் எக்காலத்திலும் விட்டகலாது. கோபத்தினால் ஏற்படும் வார்த்தைகள் நெருப்பைவிட கொடிய காயத்தை ஒருவருக்கு உருவாக்குவதால் வீண்பேச்சை குறைக்க வலியுறுத்துகிறார் வள்ளுவர் பெருமான்.
இதுபோன்ற பேச்சினால் சிறிது சிறிதாக ஏற்படும் காயங்கள்தான் பெரிய சண்டைகளுக்கும் பிளவுகளுக்கும் மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்பதை உளவியல் சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்திய நாட்டில் கணவன் மனைவியிடையே நிகழும் மணமுறிவுக்கு மிக முக்கிய காரணங்களில் முதலாவதாக உடலளவிலும், மனதளவிலும் ஏற்படுத்தப்படும் காயங்களைச் சொல்லுகின்றன அண்மை ஆய்வுகள். இது கணவன் மனைவிக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லாவிதமான உறவுகளுக்குமே பொருந்தும் எனக் கருதுகிறேன். திருத்தூதர் யாக்கோபு இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நன்கு அறிந்திருந்தார். எனவேதான் நாவின் செயல்பாடுகளையும், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும், நாவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். திருத்தூதர் யாக்கோபு 3: 2-10.
நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள்.
குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம்.
கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும்கூட, கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர்.
மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால் பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது. பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது.
நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது.
காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர்.
ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.
தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.
இதைவிட நாவைப் பற்றியும், நாவடக்கம் பற்றியும் யாராலும் அழுத்தம், திருத்தமாகச் சொல்லமுடியாது என நினைக்கிறேன். எனவே நம் நாவைச் சரியாகப் பயன்படுத்துவோம். இவ்வுலகில் பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் சரி, நன்மை, தீமை என்பவை பொதுவானதே. எதுவுமே அதைப் பயன்படுத்தும் மனிதர்களாகிய நம்மைப் பொறுத்ததே. இக்கருத்தை எளிதாக நம் மனதில் பதிய வைக்கும் ஒரு கதையைச் சொல்லி இன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்யலாம்.
குரு ஒருவருக்கு அழகான மகள் ஒருத்தி இருந்தாள். அவளை மணமுடிக்க பலர் போட்டி போட்டனர். குருவுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் மகளை மணமுடிக்க போட்டி போடுபவர்களிடம் "நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு யார் சரியாக பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கே எனது மகளை மணமுடித்து கொடுப்பேன்" என்றார். மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடினார்கள். குரு அவர்களைப் பார்த்து" உலகிலேயே மிக இனிமையான பொருள் ஒன்று கொண்டு வாருங்கள்" என்றார். ஒருவன் தேனைக் கொண்டு வந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி எல்லோரும் கிடைத்த இனிமையான பொருட்களைக் கொண்டு வந்தார்கள். வரிசையின் கடைசியில் குருவின் ஏழை சீடனும் நின்றிருந்தான். குரு அவனை பார்த்து நீயுமா என்று கேட்டார். சீடன் "நான் உங்கள் மகளை காதலிக்கிறேன்" என்று சொன்னான். குரு "நீ என்ன கொண்டு வந்தாய்" என்று கேட்டார். சீடன் தான் கொண்டு வந்த பெட்டியை திறந்து காட்டினான். அதை பார்த்ததும் குரு அதிர்ச்சி அடைந்தார். அது ஒரு மாட்டின் நாக்கு. குரு "என்ன இது? எதற்காக இதைக் கொண்டு வந்தாய்?" என்று கேட்டார். சீடன் "குருவே நீங்கள் உலகத்திலேயே இனிமையான பொருளைக் கொண்டு வரச்சொன்னீர்கள். நாக்கைவிட உலகில் இனிமையான பொருள் வேறு ஏது? மனிதருடைய நாக்கை கொண்டுவர முடியவில்லை. அதன் குறியீடாக மாட்டின் நாக்கை கொண்டு வந்தேன். நாவிலிருந்து இனிமையான சொற்கள் வருகின்றன. அதை நோயாளி கேட்டால் குணமடைகிறான். சோகத்தில் இருப்பவன் கேட்டால் மகிழ்ச்சி அடைகிறான்" என்றான். குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். பாராட்டுகள்" என்றார்.
சீடன் இரண்டாம் கேள்வி என்ன என்று கேட்டான். குரு "உலகிலேயே கசப்பான பொருள் ஒன்று கொண்டு வர வேண்டும்" என்றார். மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருட்களுடன் வந்தார்கள். ஒருவன் எட்டிக்காயை கொன்டு வந்திருந்தான். இன்னொருவன் வேப்பங்காயை கொண்டுவந்திருந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதைத் திறந்து குருவிடம் காட்டினான். அதே மாட்டின் நாக்கு. குரு "நீ என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளைக் கேட்டேன், நாவைக் கொண்டு வந்தாய். கசப்பான பொருளைக் கேட்டேன், அதே நாவைக் கொண்டு வந்திருக்கிறாய். இதற்கு என்ன அர்த்தம்?" என்று கோபத்துடன் கேட்டார். சீடன் "தீய சொற்களைப் பேசும் நாவைவிட உலகத்தில் கசப்பான பொருள் வேறு உண்டா? அதிலிருந்து வரும் கசப்பான சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாக இருப்பவனும் வருத்தப்படுவான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறிவிடுவான். எனவே நாக்குதான் உலகிலேயே மிகவும் கசப்பான பொருள்" என்று கூறினான். சீடனின் அறிவைக் கண்டு வியந்து குரு தன் மகளை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.