2012-10-16 16:34:13

திருத்தந்தை : கிராமப்புற கூட்டுறவு அங்காடிகளுக்கு நிதி மற்றும் சட்டரீதியான உதவிகள் வழங்கப்படப் பரிந்துரை


அக்.16,2012. வேளாண் உற்பத்திக்கும், உணவுப் பாதுகாப்புக்கும், சமுதாய மாற்றத்துக்கும், மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பெருமளவில் முன்னேற்றுவதற்கும் கிராமப்புற கூட்டுறவு அங்காடிகள் அதிகம் உதவ முடியும் என்பதால், அவைகளுக்கு நிதி மற்றும் சட்டரீதியான உதவிகள் வழங்கப்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 16, இச்செவ்வாயன்று உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனப் பொது இயக்குனர் ஹோசே கிரசியானோ த சில்வாவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இவ்வுலக தினத்தின் கருப்பொருளாகிய “வேளாண் கூட்டுறவு அங்காடிகள் உலகுக்கு உணவு வழங்க முடியும்” என்பது குறித்து விளக்கியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் இன்னல்களைக் களைவதற்கும், உலகமயமாக்கலுக்கு உண்மையான அர்த்தம் கொடுப்பதற்கும் தகுதியான தலையீடுகள் தேடப்பட்டுவரும் சூழலில், கூட்டுறவு அங்காடிகள் மனிதருக்குச் சேவைபுரிவதில் பொருளாதாரத்தின் புதிய அமைப்பை முன்வைக்கின்றன என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த ஒரு புதிய சூழலில் இளைய தலைமுறையும், பண்ணைத்தொழில், கிராமப்புற மற்றும் பாரம்பரிய விழுமியங்களோடு தொடர்பு ஏற்படுத்தி, தங்களது எதிர்காலத்தை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் நோக்க முடியும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.