2012-10-15 16:51:26

உலகில் கத்தோலிக்கர்கள் அதிகரித்து வருகின்றனர்


அக்.15,2012. 2010ம் ஆண்டு இறுதி வரை உள்ள புள்ளிவிவரங்களின்படி உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 0.04 விழுக்காடு அதிகரித்து உலக மக்கள்தொகையில் 17.46 விழுக்காடாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவை புள்ளிவிவரப் புத்தகத்தை மேற்கோள்காட்டி இதனைத் தெரிவித்துள்ள ஃபிதெஸ் செய்தி நிறுவனம், உலகில் ஆயர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டின் இறுதியில் 5,104 ஆக இருந்தது எனவும் தெரிவிக்கிறது.
உலகில் குருக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 12 ஆயிரத்து 236 ஆக இருந்தது எனவும், இதில் 2,77,009 பேர் மறைமாவட்ட குருக்கள் எனவும், 1,35,227 பேர் துறவு சபை குருக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமாவட்ட குருக்களின் எண்ணிக்கை மிகச்சிறிய அளவில் அதிகரித்து வரும் வேளை, துறவறக்குருக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் திருஅவை புள்ளிவிவர ஏட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் பெண்துறவறத்தாரின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 7,436 குறைந்து 7 இலட்சத்து 21 ஆயிரத்து 935 ஆக இருந்தது எனக்கூறும் திருஅவை ஏடு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவில் பெண்துறவுசபைகளில் இணைவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் இது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கிறது.
உலகில் பொதுநிலை மறைபோதகர்கள் மற்றும் வேதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.