2012-10-13 16:03:18

மாமன்றத் தந்தையர் : திருஅவைக்குள்ளே ஒரு சுயமதிப்பீட்டுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அழைப்பு விடுக்கின்றது


அக்.13,2012. இச்சனிக்கிழமை காலை திருத்தந்தையின் முன்னிலையில் செபத்துடன் தொடங்கிய 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 9வது பொது அமர்வில் 241 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
கேரளாவின் சீரோ-மலபார்ரீதித் திருஅவைத் தலைவரான Ernakulam-Angamaly பேராயர் கர்தினால் George ALENCHERRY, சீரோ-மலங்கராரீதித் திருஅவைத் தலைவரான திருவனந்தபுரம் பேராயர் Baselios Cleemis THOTTUNKAL, C.M.I துறவு சபையின் அதிபர் அருள்தந்தை Jose PANTHAPLAMTHOTTIYIL, அரபுப் பகுதியின் இலத்தீன்ரீதி ஆயர் பேரவைத் தலைவரும் எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவருமான Fouad TWAL, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் Peter TURKSON உட்பட 24 பேர் இவ்வமர்வில் உரையாற்றினர்.
திருஅவைக்குள்ளே ஒரு சுயமதிப்பீட்டுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அழைப்பு விடுக்கின்றது என்றுரைத்த கர்தினால் George ALENCHERRY, கிறிஸ்து யார், அவரது சீடர்களாக இருக்க வேண்டுமானால் எதையெல்லாம் அவர்கள் எதிர்கொள்ள வேண்டுமெனத் தெரியாமல் திருஅவைக்குள்ளே பலர் இருக்கின்றார்கள் என்று கூறினார்.
உலகாயுதப்போக்கு, தனிப்பட்டக் கிறிஸ்தவர்களையும் திருஅவைச் சமூகங்களையும் பாதித்துள்ளது என்றுரைத்த கர்தினால் ALENCHERRY, தனிப்பட்டக் கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வைப் புதுப்பிக்கவும், திருஅவையின் அமைப்புமுறைகள் மறுமதிப்பீடு செய்யப்படவும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி வலியுறுத்துகிறது என்று கூறினார்.
மேலும், பேராயர் Baselios Cleemis THOTTUNKAL பேசியபோது, உலகின் 60 விழுக்காட்டு மக்கள் ஆசியாவில் வாழ்கின்றனர், கிறிஸ்தவம் உட்பட பல உலக மதங்களின் பிறப்பிடமாகவும் ஆசியா இருக்கின்றது, அறிவிப்பு, நற்செய்தி அறிவிப்பு போன்ற சொற்கள் இக்கண்டத்தில் வரவேற்புப் பெறுவதுபோல் தெரியவில்லை, ஆனால் சான்று பகரக்கூடியவர்களே மக்களுக்குத் தேவைப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
திருவழிபாடுகள், எம்மாவுஸ் அனுபவத்தை எடுத்துச் சொல்வதாகவும், மனித வாழ்வையும் மனித மாண்பையும் ஊக்குவிக்கும் நீதி, சனநாயக விழுமியங்களை வளர்த்தல் போன்றவைகளுக்காகத் திருஅவை பணிசெய்வது இயேசுவின் விருப்பத்துக்குப் பணிந்த நடப்பதாக இருக்கும் எனவும் பேராயர் THOTTUNKAL கூறினார்.
அருள்தந்தை Jose PANTHAPLAMTHOTTIYIL பேசியபோது, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குச் சமூகத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவதற்குத் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுமாறு பரிந்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.