2012-10-12 16:25:22

நைஜரீயாவில், உரையாடல் வழியாக நீதியுடன்கூடிய அமைதி ஏற்படுவதற்கு மாமன்றத் தந்தையர் வலியுறுத்தல்


அக்.12,2012. கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஏழாவது பொது அமர்வு இவ்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குச் செபத்துடன் ஆரம்பமானது.
மெக்சிகோவின் Guadalajara பேராயர் கர்தினால் Francisco ROBLES ORTEGA தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 252 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இப்பொது அமர்வில் முதலில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச், கடும் துன்பங்களை எதிர்கொண்டுவரும் நைஜரீய ஆயர் பேரவைக்கு இம்மாமன்றத் தந்தையர் சார்பாகத் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார்.
ஆப்ரிக்க நாடான நைஜரீயாவில், குறிப்பாக அந்நாட்டின் வடபகுதியில் ஒழுங்கற்ற நிலையினால் வன்முறைகள் வெடிக்கின்றன என்றுரைத்து, அந்நாட்டில் உரையாடல் வழியாக நீதியுடன்கூடிய அமைதியை ஊக்குவிக்கும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு இம்மான்றத் தந்தையர் பெயரால் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார் பேராயர் எத்ரோவிச்.
மதங்கள், சில குழுக்கள் மற்றும் கட்சிகளின் நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படாமல், அவை புரிந்துகொள்ளுதல், ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.