2012-10-12 16:34:29

ஐரோப்பிய சமுதாய அவைக்கு நொபெல் அமைதி விருது 2012


அக்.12,2012. EU என்ற ஐரோப்பிய சமுதாய அவை, ஐரோப்பாவில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அறுபது ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, அந்த அவை 2012ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நார்வே நொபெல் குழு அறிவித்தது.
ஐரோப்பா, போரின் கண்டத்திலிருந்து அமைதியின் கண்டமாக மாறுவதற்கு EU அவை பெரிதும் உதவியுள்ளது என்றும் நார்வே நொபெல் குழு அறிவித்தது.
EU அவை, தனது வரலாற்றில் தற்போது கடும் நிதிநெருக்கடிகளையும் சமூகப் பதட்டநிலைகளையும் எதிர்நோக்கினாலும், அமைதி, ஒப்புரவு, சனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு இந்த அவை கடந்த அறுபது ஆண்டுகளாக உழைத்து வருவதைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் குழுவின் தலைவர் Thorbjoern Jagland கூறினார்.
மேலும், இவ்விருது பற்றிய தனது கருத்தை வெளியிட்ட EU அவைத் தலைவர் Jose Manuel Barroso, EU அவையின் 50 கோடி குடிமக்களுக்கும் இந்த அமைதி விருது மிகுந்த மதிப்பைக் கொடுத்துள்ளது என்று கூறினார்.
இன்னும், இவ்வாண்டுக்கான நொபெல் இலக்கிய விருது சீன எழுத்தாளர் மோ யானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.