2012-10-11 15:17:23

ஆயர்கள் மாமன்றத்தில் குவாத்தமாலா பேராயர் : இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே மனித வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றனர்


அக்.11,2012. நித்திய வாழ்வுக்கு கடவுள் நம் அனைவருக்கும் விடுக்கும் அழைப்பின் கண்ணோட்டத்தில் மனித வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு முதலில் உதவுவது இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே என்று 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினார் குவாத்தமாலாவின் லாஸ் ஆல்த்தோஸ் பேராயர் மாரியோ ஆல்பெர்த்தோ மொலினோ பால்மா.
மனித வாழ்வின் பொருளையும் அதன் கூறுகளையும் விழுமியங்களையும் இழக்கச் செய்யும் மரணம் குறித்த பிரச்சனைகளுக்குப் பதில் அளிப்பது இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே என்றும் பேராயர் மொலினோ பால்மா கூறினார்.
இந்த ஒரு கண்ணோட்டமே தங்களது மேய்ப்புப்பணிகளுக்கு மிகவும் உதவுகின்றன என்றுரைத்த பேராயர் மொலினோ பால்மா, மனிதர் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலத்தீன் அமெரிக்காவில் பல மேய்ப்புப்பணி முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கூறினார்
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் இப்புதன் மாலை பொது அமர்வில் 250 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் தொடங்கிய இந்தப் பொது அமர்வில், உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட 16 மாமன்றத் தந்தையர்கள் உரையாற்றினர்.








All the contents on this site are copyrighted ©.