2012-10-11 15:19:54

ஆயர்கள் மாமன்றத்தில் ஆங்லிக்கன் பேராயர் : இன்றைய தன்னிலை மறந்த உலகில் வாழ்வதற்குத் தியானம் முக்கியமானது


அக்.11,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் இப்புதன் மாலையில் இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 5வது பொது அமர்வில் உரையாற்றிய இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், இன்றைய தன்னிலை மறந்த உலகில் வாழ்வதற்குத் தியானம் முக்கியமானது என்று கூறினார்.
பள்ளிச் சிறாரும், எந்தவித மதப் பின்னணியும் இல்லாதவர்களும், கிறிஸ்தவத்தைப் புரிந்து கொள்ள உதவுவதற்கு ஒரு கருவியாக, தியானம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பேராயர் வில்லியம்ஸ் கூறினார்.
விளம்பரங்கள், பணம் சேர்க்கும் வங்கி அமைப்புகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட நுகர்வுத்தன்மை கொண்ட பித்துப்பிடித்த ஓர் உலகத்தில்வாழும் காரணத்தினால், இன்றைய நவீன உலகின் மக்கள் ஒரு குழப்பமான உணர்ச்சிகளோடு போராடி வருகின்றனர் என்றும் பேராயர் வில்லியம்ஸ் பேசினார்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய நிதி அமைப்பு முறைகள் மற்றும் விளம்பரக் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட இவ்வுலகுக்குத் தியானமும், அமைதியான செபமுமே பதில் சொல்வதாக இருக்கும் என்றும் உரைத்த பேராயர், தியான வாழ்வைப் பயிற்சி செய்வதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அன்புடனும் வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தினார்.
6வது பொது அமர்வு இவ்வியாழன் மாலை தொடங்கியது.








All the contents on this site are copyrighted ©.