2012-10-10 15:34:19

பாகிஸ்தானில் தலிபான்களால் சிறுமி தாக்கப்பட்டதற்கு ஐ.நா.அதிகாரி கண்டனம்


அக்.10,2012. பாகிஸ்தானின் வடமேற்கேயுள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பழங்குடியினப் பகுதியில் சிறுமிகளின் கல்விக்காகக் குரல்கொடுத்துவந்தவரும், தலிபான்களின் கொடுமைகளை வெளிக்கொணர்ந்தவருமான Malala Yousufzai என்ற 14 வயதுச் சிறுமி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஐ.நா. அதிகாரி Leila Zerrougui.
சண்டை இடம்பெறும் இடங்களில் சிறாரின் பாதுகாப்புக்கான ஐ.நா.பொதுச்செயலரின் சிறப்புப் பிரதிநிதி Zerrougui, பாகிஸ்தானின் Tehrik-i-Taliban என்ற குழுவால் இச்செவ்வாயன்று சுடப்பட்ட இரண்டு பள்ளிச் சிறுமிகளும் விரைவில் குணமடைய வேண்டுமென்ற தனது ஆவலைத் தெரிவித்துள்ளார்.
கல்வி, சிறாரின் அடிப்படை உரிமை என்று கூறிய Zerrougui, இந்த தலிபான் குழு அனைத்துச் சிறாரும் கல்வி பெறுவதற்குரிய உரிமையை மதிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு வாகனத்தை தலிபான்கள் வழியில் நிறுத்தியதாகவும், அந்தக் வாகனத்தில் சிறுமி மலாலா இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு பின்னர் துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
"கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் இடமாக தனது நாடு வரவேண்டும் என்பதே எனது கனவு" என்ற நோக்குடன் மலாலா எழுதிய தினசரி குறிப்புகளுக்காக, பாகிஸ்தானின் தீரச் செயலுக்கான தேசிய விருது அவருக்கு ஏற்கனவே கிடைத்திருக்கிறது.
மலாலாவுக்கு தலையிலோ அல்லது கழுத்திலோ குண்டு பாய்ந்ததாகவும், ஆனால் உயிராபத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
தலிபான்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது மலாலாவுக்கு வெறும் 11 வயதுதான். அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென தலிபான்கள் அப்போது உத்தரவிட்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆயுதம் தாங்கியவர்களால் தங்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களை மலாலா வெளியுலகுக்கு தெரிவித்துவந்தார்.







All the contents on this site are copyrighted ©.