2012-10-10 15:23:26

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக். 10, 2012. உலக ஆயர்கள் மாமன்றத்தை கடந்த ஞாயிறன்று துவக்கி வைத்து, இவ்வியாழனன்று 'விசுவாச ஆண்டை’ துவக்கி வைப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 50 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 11ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கி வைக்கப்பட்டதை எடுத்துரைத்து தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு நாளின் முந்தைய நாள் இன்று. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் காலத்தில், ஆயர்கள் மட்டுமல்ல, அகில உலகத் திருஅவையும் கொண்டிருந்த ஆர்வம், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை நான் நினைவில் கொண்டுள்ளேன். நாளை நாம் 'விசுவாச ஆண்டை' துவக்க உள்ள இவ்வேளையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஏடுகளுக்கு நாம் திரும்பிச் செல்லவேண்டிய அவசியம் எக்காலத்தையும்விட தற்போது அதிகமாக உள்ளது. இப்பொதுச்சங்கத்தைக் கூட்டிய அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், விசுவாச உண்மைகளின் மூலத்திற்கு எப்போதுமே சிதைவு வராமல், அவ்வுண்மைகளைப் புதுப்பிக்கப்பட்ட வழிகளில் அறிவிப்பதற்கே பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து நம்மை வாழ்வை நோக்கி வழிநடத்திச் செல்லும் இயேசுவுடன் தனிப்பட்ட மற்றும் குழுவான சந்திப்பிலும், மூவொரு கடவுளிலான விசுவாசத்திலும், கிறிஸ்தவம் அடங்கியுள்ளது என்ற பொதுச்சங்கத்தின் ஆழமான செய்தியை, இறைவனை மறந்து வாழும் நம் காலத்தின் இத்தலைமுறையினருக்கு நினைவுறுத்த வேண்டிய தேவை உள்ளது. இதிலிருந்தே அனைத்தும் தொடர்கின்றன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலத்தைப் போலவே இப்போதும் நாம் சில விடயங்களைத் தெளிவாக ஏற்றுக்கொள்வோம். அதாவது, கடவுள் நம்மிடையே உள்ளார், அவர் நம்மை கண்காணித்து வருகிறார், அவர் நமக்குப் பதிலுரை வழங்குகிறார், மனிதர் கடவுளை மறக்கும்போது அவர் தன் மனித மாண்புக்கு இன்றியமையாமல் இருக்க வேண்டிய ஒன்றையே மறந்து விடுகிறார் என்பவைகளைத் தெளிவுடன் ஏற்போம். நம்மை மீட்டு முடிவற்ற பேறுபெற்ற நிலைக்கு வழிநடத்திச் செல்லும் இறை அன்பு எனும் செய்தியை தன் அங்கத்தினர்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கும் பணியை திருஅவை கொண்டுள்ளது என்பதை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இந்த 50ம் ஆண்டு நிறைவு நமக்கு நினைவுறுத்தி நிற்கின்றது.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை. புதன் பொதுமறைபோதகங்களின்போது பல்வேறு மொழிகளில் வாழ்த்துக்களை தெரிவித்துவரும் திருத்தந்தை, இப்புதனிலிருந்து, அரபு மொழியில் வாழ்த்துக்களை வெளியிடுவதையும் ஆரம்பித்து வைத்தார்.
மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.