2012-10-10 15:20:25

13வது உலக ஆயர்கள் மாமன்றம் : இறைவார்த்தையின் முக்கியத்துவம்


அக்.10,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பிரதிநிதிகள் இப்புதன் காலையில் சிறு குழுக்களாகப் பிரிந்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இம்மாமன்றத்தின் 5வது பொது அமர்வு இப்புதன் மாலையில் தொடங்கியது. இதில் இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த ஆங்லிக்கன் சபையின் கண்ணோட்டம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், "Verbum Domini" என்ற இறைவார்த்தை பற்றிய அப்போஸ்தலிக்க ஏடு உலகில் வரவேற்கப்பட்டுள்ள விதம் குறித்த விரிவான அறிக்கையை, ஆயர்கள் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, இச்செவ்வாய் மாலை நடைபெற்ற 4வது பொது அமர்வில் சமர்ப்பித்தார்.
2008ம் ஆண்டில் இடம்பெற்ற இறைவார்த்தை குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் கனியாக இவ்வேடு திருத்தந்தையால் வெளியிடப்பட்டது எனவும், இத்தாலியத்தில் அறுபதாயிரம் பிரதிகள் உட்பட உலகில் 20 கோடி பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் கர்தினால் Ouellet கூறினார்.
இறைவார்த்தைக்கும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்தும் கர்தினால் விளக்கினார். இப்பொது அமர்வில் 253 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.