2012-10-09 16:43:47

கத்தோலிக்கத் தலைவர்கள் : மருத்துவ நொபெல் விருது அறநெறியியலுக்கு கிடைத்த வெற்றி


அக்.09,2012. உடலின் முதிர் உயிரணுக்களைக்கூட வளருகின்ற, உடலில் எந்த இடத்திலும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்தக்கூடிய உயிரணுக்களாக மாற்றியமைக்க முடியும் என்ற கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ள மருத்துவ நொபெல் விருது அறவியலுக்கு கிடைத்த வெற்றி என்று ஐரோப்பியக் கத்தோலிக்கத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த John B. Gurdon, ஜப்பானைச் சேர்ந்த Shinya Yamanaka ஆகிய இரு அறிவியலாளர்களின் மனித முதிர் உயிரணுக்கள் குறித்த ஆய்வு முடிவுகள் முக்கியமான மைல்கல் என்று ஐரோப்பிய சமுதாய அவையின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கு உதவிபுரியும் Anscombe Bioethics மையமும் இந்த நொபெல் விருதை, மாபெரும் ஒழுக்கநெறியியல் சாதனையின் விருது எனப் பாராட்டியுள்ளது.
இவ்விரு அறிவியலாளரும் இணைந்து முதிர் உயிரணுக்கள் குறித்தும், உடல் உறுப்புகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதும் குறித்தும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு அறிவியலாளர்களின் ஆராய்ச்சிக்கும், மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
குடலிலிருந்து உயிரணு மாதிரியொன்றை எடுத்து அதன்மூலம் தவளைகளை குளோனிங் மூலம் உருவாக்கியவர் பேராசிரியர் ஜான் குர்டோன்.
அதேபோல பேராசியர் யமானாகா உயிரணுக்களின் செயல்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் நோக்கோடு மரபணுக்களையே மாற்றிச் சாதனை புரிந்தவர்.
மேலும், பிரான்ஸைச் சேர்ந்த செர்ஜி ஹரோச்சி, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வினிலேன்ட் ஆகியோர் நொபெல் இயற்பியல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணனித் துறையில் மிக முக்கியமான குவாண்டம் இயற்பியல் குறித்து ஆராய்ச்சி செய்துள்ள இவர்களின் ஆராய்ச்சியே, புதிய வகையிலான சூப்பர் பாஸ்ட் கணனிகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு முதல்படி என்று நொபெல் விருது அறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல், புதிய வகையிலான கடிகாரங்களைத் தயாரிக்க இவ்வாய்வு முன்னோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.