2012-10-09 16:36:36

ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் கிரேசியஸ்


அக்.09,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் உரையாற்றிய மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், சில ஆசிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறைத் துன்பங்கள் அதிகரித்து வந்தாலும், இத்துன்பங்களுக்கு மத்தியிலும் வீரத்துவமான சான்று வாழ்க்கையை அந்நாடுகளில் காண முடிகின்றது என்று கூறினார்.
விசுவாசத்தை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு அதனை இன்னும் உண்மையுடன் வாழ்ந்து அதிக நம்பிக்கையுடன் அதனை அறிவிப்பதற்கு ஆசிய மக்கள் விசுவாச ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
ஆசிய மக்களுக்கு மதம் என்பது கோட்பாடுகளுக்கு அல்லது சட்ட விதிமுறைகளுக்குப் பணிவதைவிட ஒருவரின் சீடத்துவத்தை அதிகமாகக் கொண்டிருப்பதாகும் என்றும், இயேசு என்ற மனிதரும் அவரது வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவையும் மிகுந்த கவர்ச்சியைக் கொடுப்பதாகவும் கூறினார் அவர்.
ஆசிய மக்களின் மனநிலை, ஆய்வுமுறையான தியானத்தைவிட ஆழ்நிலை தியானத்தில் அதிகமான அர்த்தத்தைக் கண்டுகொள்வதால், திருவழிபாடுகளிலாவது ஆழ்நிலைத் தியானங்களில் கவனம் செலுத்தப்பட்டால் அவற்றில் மக்கள் இறைப்பிரசன்னத்தை உணருவதற்கு ஓர் ஆழமான திருப்தியை அளிக்கும் என்றும் கர்தினால் கிரேசியஸ் பரிந்துரைத்தார்.
உலகத் தாராளமயமாக்கல் ஆசிய மக்கள் வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் தற்போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் உரைத்த மும்பை கர்தினால், ஆசியாவில் உலகாயுதப் போக்கும், பொருளே முக்கியம் என்ற கொள்கையும் அதிகமாகப் பரவி வருகின்றது என்றும், திருமணமுறிவுகள் சமூகக் கலாச்சாரத்தில் தடைசெய்யப்பட்டிருந்த ஆசியாவில் தற்போது இவைப் பொதுவான ஒன்றாக இருக்கின்றன என்றும், உறுதியான குடும்ப அமைப்புகளும் சிதைந்து வருகின்றன என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.







All the contents on this site are copyrighted ©.